படம் பார்த்து படி
படம் பார்த்து படி, சுரேகா, மதி நிலையம், பக். 128, விலை 100ரூ.
நாவல் வடிவில், மேலாண்மைக் கருத்துக்களைப் புரிய வைப்பதுதான் நூலாசிரியர் சரேகாவின் பாணி. இந்த நாவலின் கதாநாயகன் குரு, ஓர் உதவி இயக்குனர். அவன் ஒரு விடுதியில் தங்கி இருக்கிறான். அங்கு பல நண்பர்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை. பிரச்சினையை அணுக தெரியாமல் தவிக்கின்றனர். நண்பர்களின் பிரச்னைக்கான தீர்வுகளை, பாய்ஸ், ரமணா, அற்புதம், வானவில், ஐயா, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், நண்பன், நான் பேச நினைப்பதெல்லாம், புதிய கீதை போன்ற பிரபல சினிமா காட்சிகளை காட்டி விளக்குகிறான் குரு. வாழ்க்கை, தொழில், மேலாண்மை என மூன்றுக்கும் தேவையான முக்கிய அம்சங்களை, அந்த திரைப்பட காட்சிகளை வைத்தே விளக்குகிறான். தமிழின் ஒரே பிசினஸ் நாவலிஸ்ட் என்ற பெருமைக்கு உரியவராகிறார் சுரேகா. “அரிச்சந்திரன் நாடகம் பார்த்துதான், சத்தியத்தை கடைபிடிக்க துவங்கினேன்,” என்று காந்தி சொல்லி இருக்கிறார். அப்படி ஒரு பொழுதுபோக்கு ஊடகம், ஒரு மனிதனின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறது என்றால், இன்றைய சினிமாவும் ஏதாவது ஒரு மாற்றத்தையோ, தாக்கத்தையோ ஏற்படும் என்று சொல்லும் சுரேகாவின் பாணி, தனித்துவம் வாய்ந்தது. சுய முன்னேற்றத்திற்கு உதவும் நல்ல நாவல் இது. -எஸ். குரு. நன்றி: தினமலர், 15/3/2015.
—-
நதிகள் இணைப்பு சாத்தியமா?, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 70ரூ.
நதிகள் இணைப்பு நடக்கிற காரியமா என்றால், ‘நடக்கும், நடக்க வேண்டும், நடந்தே தீர வேண்டும்’ என்பதற்கான சகல அம்சங்களையும் புள்ளி விவரங்களுடன் அழுத்தந்திருத்தமாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் குன்றில் குமார். நன்றி: தினத்தந்தி, 18/3/2015.