பத்திரிகைகளுக்கு எழுதுவது எப்படி?
சேற்றில் மலர்ந்த செந்தாமரை, தொ.மு.சி. ரகுநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 08, பக்கம் 110, விலை ரூ. 75
தொ.மு.சி. ரகுநாதன் தமிழகம் நன்கு அறிந்த முற்போக்கு இலக்கியவாதி. திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைபெயரில் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் தனித்த முத்திரை பதித்தவை. இவரது ‘பஞ்சும் பசியும்’ என்ற நாவல்தான் தமிழ் மொழியிலிருந்து முதன் முதலாக ஐரோப்பிய மொழியொன்றில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவலாகும். 1940களில் அவர் எழுதிய 10 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். இதில் இடம் பெற்றுள்ள கதைகள் யாவும் மனித வாழ்வை வனப்படுத்தும் வேட்கையைப் பிரதிபலிப்பவை.
—
வலது காலை எடுத்து வைத்து வா, ‘பொம்மை’ சாரதி, அஸ்வினி புக் கம்பெனி, 73/2, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 14. பக்கம் 200, விலை ரூ. 65
வெவ்வேறு பத்திரிகைகளில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு, சமகால மனிதர்களின் நிஜ மனதை உயிரோட்டமாக நம்முன் நிறுத்தும் முயற்சிதான் இக்கதைகள். காதலின் ஆழம், நடைமுறைச் சிக்கல்கள், சமூக அவலங்கள் என்று எதையும் விடாமல் அலசியிருக்கிறார் கதை ஆசிரியர். முத்தாய்ப்பாக ஒவ்வொரு சிறுகதைக்கும் அனுராதா ரமணன், விமலா ரமணி, தேவிபாலா போன்ற பிரபல எழுத்தாளர்களின் விமர்சனத்தையும் சேர்த்துத் தந்திருப்பது சுவாரஸ்யம்.
—
பத்திரிகைகளுக்கு எழுதுவது எப்படி?, லோகநாயகி, குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 10, பக்கம் 158, விலை ரூ. 100 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-476-6.html
வாசகிகளை எப்படியாவது எழுத வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் குமுதம் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி சிநேகிதியில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இது தொடராக வந்தபோதே இதைப் படித்து சிநேகிதிக்கு கட்டுரைகள் எழுதி பாராட்டுப் பெற்ற வாசகிகள் பலர் இருக்கிறார்கள். பெண்களுக்கு மட்டுமல்ல, புதிதாக எழுதத் துடிக்கும் ஆண்களுக்கும் எப்படி எப்படியெல்லாம் எழுதினால் பத்திரிகைகளில் பிரசுரமாகும் என்பதைச் சொல்லிக்கொடுக்கும் நூலாக விளங்குகிறது. உங்கள் உணர்வுகளை, அனுபவங்களை, எழுத்தாக வடித்தால் மட்டும் போதுமா? அவை பத்திரிகைகளில் பிரசுரமானால்தானே அந்த எழுத்துக்கு உயிர் வரும். பத்திரிகைகளுக்கு ஏற்றபடி, எப்படி எழுதவேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று உங்களுக்கு இந்நூல் சொல்லித்தருகிறது. படித்துப் பாருங்கள். நீங்கள் எழுத்தாளர் ஆவது உறுதி. நன்றி: குமுதம் 28-11-2012