பன்முகப் பார்வை
பன்முகப் பார்வை, எஸ். பொன்னுசாமி என்ற எஸ்.பொ., மித்ரா பதிப்பகம்.
முற்போக்கிற்கு மாற்று நற்போக்கு இலங்கை எழுத்துலகில் முக்கிய இடத்தில் இக்கும் எஸ்.பொன்னுசாமி என்ற எஸ். பொ., வின் பன்முகப் பார்வை என்ற நூலை சமீபத்தில் படித்தேன். மித்ரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இலங்கையில், ஆறுமுக நாவலருக்கு அடுத்து, வசன நடையில், தரமான படைப்புகளை அளித்தவர் எஸ்.பொ. தலித் குடும்பத்தில் பிறந்ததால், கல்விக் கூடங்களில் மாணவர்களால் தரக்குறைவாக நடத்தப்பட்டார். இதுபோன்றதொரு நிலை, தன் வாரிசுகளுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக, வளோள இனப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் எஸ்.பொ. கவிதை மூலம் அறிமுகமானாலும், நாவல், சிறுகதைகள் மூலமே பிரபலமானார். முற்போக்கு எழுத்தாளர்களுடன் அவர் இணைந்து செயலாற்றினாலும், அவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதலால், நற்போக்கு என்ற இயக்கத்தை எழுத்துலகில் துவக்கினார். இந்த இயக்கம் முற்போக்கு சிந்தனையை பேச்சளவில் வைத்துக்கொள்ளாமல், செயல்பாட்டில் காட்டும். எந்த காலத்திலும் பிற்போக்குடன் சமரசம் செய்து கொள்ளாது என எஸ்.பொ., அறிவித்தார். பன்முகப் பார்வை நூலில் எஸ். பொ.வின் வாழ்க்கைப் பதிவுகள், உள்ளன. அவர் எழுதிய ஓரினச் சேர்க்கை குறித்த ‘தீ’ நாவல் பெரும் சர்ச்சையை இலங்கையில் ஏற்படுத்தியது. அந்த நாவலை தீயிட்டு கொளுத்தினர். அதேநேரம், சமூகத்தின் நிலையை யதார்த்தமாக பதிவு செய்த எஸ்.பொ.வின் தைரியத்துக்கு ஆதரவும் குவிந்தது. அரசியல் தொடர்பான ‘மாயினி’, இலங்கையின் பூர்வ குடிகள் குறித்த ‘மகாவம்சம்’ போன்றவை மிக முக்கியமான நூல்கள். ‘மாயினி’ நூலில் இந்திரா காந்தி, சந்திரிகா குமாரதுங்க போன்ற அரச குடும்பங்களில் நடந்து, உலகுக்கு வெளிவராத தகவல்களை பதிவு செய்துள்ளார். ஒடிசாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட விஜயன் மற்றும் 500 பேரின் வருகைதான், இலங்கையில், சங்களர்கள் தோன்றக் காரணம். அதற்கும் முன்பே, தமிழர்கள் இலங்கையில் உள்ளனர் என்பதை, மகா வம்சம் உறுதி செய்கிறது. இலங்கையில் நடந்து வரும் இன மோதல்களுக்கு மத்தியில், தமிழர்களின் உண்மை நிலையை, இந்த நூல் உணர்த்துகிறது. இலங்கையில், தமிழர்களின் வரலாற்று சான்றுகளை அழித்தும், ஒழித்தும் வரும் நிலையில் எஸ்.பொ.வின் நூல்கள் மிகப் பெரிய சான்றுகளாக தமிழர்களுக்கு உள்ளன. -ஈழவாணி. நன்றி: தினமலர், 25/1/2015.