பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற இசைப்பாடகர்கள்
பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற இசைப்பாடகர்கள், எஸ்.எஸ். பாரத்வாஜ், மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 204, விலை 175ரூ.
ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார் போன்ற சமயாச்சாரியார்களில் தொடங்கி, தேவார மூவர், மணிவாசகர், பன்னிரு ஆழ்வார்கள், தியாகராஜர் முதலான மும்மூர்த்திகள், தமிழிசை மூவர், தாயுமானவர், அருணகிரிநாதர், பட்டினத்தார், திருமூலர் போன்ற 43 அருளாளர்கள் பிறந்த காலம், அவர்களின் தீவிரமான தெய்வ பக்தி, வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள், சுருக்கமான வரலாறு, அவர்கள் இயற்றிய நூல்கள் போன்றவை இந்நூலில் சிறப்பாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றோடு நின்றுவிடாமல், அவர்கள் இயற்றிய பாடல்களிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பது மிகவும் சிறப்பு. பிரபலமான பாடல்கள் என்று பார்க்காமல் பொருள் பொதிந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருப்பதன் மூலம் நூலாசிரியர் பக்தி இலக்கியங்களில் ஆழங்கால் பட்டவர் என்பது புலனாகிறது. சங்கீதத்தில் ஸ்வரஜதி என்னும் பயிற்சி வடிவம் தோன்றுவதற்கு ஸ்யாமா சாஸ்திரிகளே காரணம். கம்பர் தனது இராமாயண நூலை அரங்கேற்றம் செய்த ஸ்ரீ ரங்கம் கோயில் மண்டபத்திலேயே அருணாசலக் கவிராயர் தன் இராமநாடகக் கீர்த்தனை நூலை அரங்கேற்றம் செய்தார் என்பன போன்ற பரவலாக அறியப்படாத செய்திகள் தரப்பட்டுள்ளன. இவ்வளவு சிறப்பான நூலில் படங்கள் இடம் பெறாதது ஒரு குறையே. தமிழ் ஆர்வலர்கள், இசை ரசிகர்கள், இறை நம்பிக்கையாளர்கள் அனைவரையும் கவரும் நூல் இது. நன்றி: தினமணி, 30/3/2015.