பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே!
பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே! முனைவர் துளசி இராமசாமி, பக். 888, வெளியீடு: விழிகள், 664, 3வது தெரு, வீனஸ் குடியிருப்பு விரிவு, வேளச்சேரி, சென்னை – 42. விலை ரூ. 700
பழந்தமிழ் இலக்கியங்கள் யாவும், நாட்டுப்புறப் பாடல்களாக இருந்தவற்றைச் சேகரித்துத் தொகுத்தவை என்றும், அதில் வரும் அடி வரையறைகளைக் கொண்டே தொகுப்புகளுக்குப் பெயரிட்டிருக்கிறார்கள் என்றும் மிகப் பெரிய அளவில் ஆய்வு செய்து முனைவர் துளசி. இராமசாமி இந்நூலை எழுதியுள்ளார். இவை எல்லாம் எழுத்து – தமிழ் – பிராமி கண்டுபிடிக்கப்பட்ட பின் தொகுக்கப்பட்டவை என்பதையும் ஆய்வில் நிறுவியுள்ளார். இவற்றிற்கு ஆசிரியர்கள் இல்லை. பாடப்பட்டோருக்கு அகச் சான்றுகள் பாட்டுக்களில் இல்லை. திணை, துறை, கூற்று, அகம், புறம் எல்லாமே பிற்காலத்தில் பகுக்கப்பட்டு நுழைக்கப்பட்டவை. இவற்றை தொகுத்தவர்கள் சமண முனிவர்கள் என்பதையெல்லாம் தரவுகளின் அடிப்படையில் விரிவாக ஆய்ந்துள்ளார். ஆய்வு மாணவர்களுக்கும் பழந்தமிழ் இலக்கியத்தின் உண்மைத் தன்மையை அறிய முயல்வோருக்கும் உதவக்கூடிய ஆவணம் இந்நூல். அவ்வகையில் துளசி. இராமசாமி பாராட்டப்படவேண்டியவர்.
—
சீக்ரெட், நடிகை சோனா, பக். 144, குமுதம் பு(து)த்தகம், 308, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 10. விலை ரூ. 100
ஒரு நடிகையின் வாழ்க்கையில், நடிப்பைத் தாண்டி என்னென்ன இருக்கின்றன என்பதை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டும் நூல். நடிகை சோனா குமுதம் ரிப்போர்ட்டரில் இதைத் தொடராக எழுதியபோது, அவரது துணிச்சல் கண்டு வாசகர்கள் பாராட்டினார்கள். நடந்ததை நடந்ததாகச் சொல்வதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். அதுவும் ஒரு நடிகையை அவர் சார்ந்த துறையைச் சேர்ந்தவர்களே, கேவலமாக நடத்தப்படும் துரதிர்ஷ்டத்தை அவர் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். நூலின் இன்னொரு சிறப்பு, எதையும் மிகையின்றி அழுத்தமாக சொல்லப்பட்டிருப்பதுதான். நன்றி: குமுதம் 19-12-12