நான் கண்ட நகரத்தார்
நான் கண்ட நகரத்தார், அமுதா பதிப்பகம், ஏ82, அண்ணாநகர், சென்னை – 102. விலை ரூ. 70
தமிழ்நாட்டில் உள்ள செட்டிநாட்டுக்குத் தனிச்சிறப்பு உண்டு. ‘நகரத்தார்’ என்று அழைக்கப்படும் செட்டியார்கள், 5 ஆயிரம் ஆண்டுகால வரலாறு படைத்தவர்கள். இங்குள்ள வீடுகள் அரண்மனை போன்று பிரமாண்டமானவை. அந்த “அரண்மனை”யின் பூட்டு, ஒரு அடிக்கு ஒரு அடி கொண்ட சதுரமானது! பூட்டு இவ்வளவு பெரிது என்றால் சாவி – ஒரு அடி நீளம் கொண்டது! எடை ஒரு கிலோ! எழுத்தாளரும், தொழில் அதிபருமான ‘அமுதா’ பாலகிருஷ்ணன் செட்டிநாட்டில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு எழுதிய புத்தகத்தில் இந்தத் தகவல்கள் காணப்படுகின்றன. இவை மட்டுமல்ல, இன்னும் எவ்வளவோ! ‘அமுதா’ பாலகிருஷ்ணன் எதையும் நகைச்சுவையுடன் எழுதும் ஆற்றல் பெற்றவர். எனவே, புத்தகத்தைக் கையில் எடுத்தால் படித்து முடிக்கும் வரை கீழே வைக்க மனம் வராது.
—
சந்தித்ததும் சிந்தித்ததும், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன், 7/1, மூன்றாவது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 83. விலை ரூ. 130
பல்வேறு தலைப்புகளில் நூலாசிரியர் யாணன் எழுதிய 22 கட்டுரைகளைக் கொண்ட நூல். முதல் கட்டுரையான “ஜவ்வாது மலைவாசிகள்” நீளமாக இருந்தாலும், சுவையான தகவல்கள் நிறைய உள்ளன. திருவண்ணாமலை அருகே உள்ளதுதான் ஜவ்வாது மலை. பலர் அறிந்திராத மலை அது. ஆசிரியர் பல சிரமங்களுக்கு இடையே அங்கே சென்று, மலைவாசிகளை பேட்டி கண்டு இக்கட்டுரையை எழுதியுள்ளார். “ஏழிசை மன்னர்” எம்.கே.தியாகராஜ பாகவதர் பற்றிய அரிய தகவல்களைத் தருகிறது, “பாகவதரை வென்றார் உண்டோ?” என்ற கட்டுரை. தமிழ்ப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டாரான பாகவதரின் வாழ்க்கையில் விதி விளையாடியதையும், நிரபராதியான அவர் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் செய்ய நேர்ந்ததையும் நெஞ்சைத்தொடும் விதத்தில் விவரித்துள்ளார் ஆசிரியர். படிப்பதற்கு நிறைய விஷயங்கள் உள்ள நல்ல புத்தகம்.
—
ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி, முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தி.நகர், சென்னை – 17. விலை ரூ. 100
மாடர்ன் தியேட்டர்சார் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் தயாரித்த திரைப்படம் “ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி.” வி.என். ஜானகி, பி.எஸ்.கோவிந்தன், எம்.ஆர்.சாமிநாதன், எஸ்.வரலட்சுமி, காளி என்.ரத்தினம் நடித்த இப்படம், மாபெரும் வெற்றி பெற்று வசூலைக் குவித்தது. இந்த வெற்றிக்குக் காரணம் கதைதான். மர்மங்களும், திருப்பங்களும் நிறைந்த விறுவிறுப்பான கதை. இக்கதையை எழுதியவர் சி.என். குப்புசாமி முதலியார். நீண்ட காலத்துக்குப்பின், மறு பதிப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. படிக்கலாம்; ரசிக்கலாம்.
—
கைரேகை ரகசியங்கள், எம். லட்சுமணன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 24/28, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை – 17. விலை ரூ. 35
ஜோதிடக் கலையின் ஒரு பகுதியான கைரேகை ஜோதிடம் பற்றி படங்களுடன் எழுதப்பட்டுள்ள சிறிய நூல். நன்றி: தினத்தந்தி 12-12-12