பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம்
பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம், ஆர்.பி.வி.எஸ்.மணியன், வர்ஷன் பிரசுரம், பக். 264, விலை 140ரூ.
விசுவ இந்து பரிஷத் நடத்தி வந்த, இந்து மித்திரன் இதழில், நூலாசிரியர் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். பேசுவது பழங்கதை அல்ல என்பது முதல் போதி தர்மர் வரை, 31 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. உலகத்தின் இயக்கத்திற்கு ஆதாரமாய் இருக்கும் அணு இயக்கத்தை, டாக்டர் பிர்டஜாப் காப்ரா என்ற விஞ்ஞானி புகைப்படமாக எடுத்திருக்கிறார். இதையே நம் முன்னோர்கள், சிவனின் ஆனந்த தாண்டவமாக வர்ணித்திருக்கின்றனர் என விளக்கி உள்ளார். இதுபோன்று, நம் முன்னோர்கள் சித்த மருத்துவம், இயற்பியல், வேதியியல், கணிதம், நீர் பாசனம், விமான இயல், போர் ஆயுதங்கள், வான இயல் என, அனைத்திலும் இந்த உலகிற்கு முன்னோடியாக இருந்துள்ளனர் என்பதை, ஆதாரங்கள் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். உலகின் மிகப்பெரிய கோவிலான, கம்போடியா நாட்டில் உள்ள விஷ்ணுகோவில், இரண்டாம் சூரிய வர்மனால், கி.பி. 1113-1159ல் கட்டப்பட்டது என்பது உள்ளிட்ட ஏராளமான தகவல்களை தந்துள்ளார். -சரண்யா சுரேஷ் நன்றி: தினமலர், 31/8/2014.
—-
Akbar the Magnifivent king, சுபத்ரா சென் குப்தா, ரூபா பதிப்பகம்.
மகாபாரதத்தை பெர்ஷிய மொழியில் மொழிபெயர்த்த அக்பர் முகலாய பேரரசை நிறுவிய அக்பரைப் பற்றி, சுபத்ரா சென் குப்தா எழுதிய Akbar the Magnifivent king என்ற நூலை அண்மையில் படித்தேன். ரூபா பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. அக்பர் பற்றிய நம் தவறான கருத்துகளை இந்த நூல் தகர்க்கிறது. அக்பரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பெருமளவு விவரிக்கிறது. பேரரசரான அவர், படிப்பறிவு இல்லாதவர். ஆனால் பெரும் நூலகத்தை தன்னகத்தே வைத்திருந்தார். இந்துக்கள் பெரிதும் போற்றும் மகாபாரதத்தை, அரபு நாடுகளில் பேசப்படும் பெர்ஷிய மொழியில் மொழிபெயர்த்து வைத்திருந்தார். பெரும் அறிஞர்களைக் கொண்டு, பல நூல்களைப் படிக்கச் சொல்லி கேட்டுக்கொண்டிருப்பார் என்பது போன்ற, அரிய தகவல்கள் அந்த நூலில் உள்ளன. இஸ்லாமியர்கள் பல பெண்களை மணப்பதை தடை செய்வது, ஜாதி ஒழிப்பு ஆகியவற்றுக்கு சட்டம் கொண்டு வர முயன்றார். குறிப்பாக, மது உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுக்குள் வைக்க, கடும் நடவடிக்கை எடுத்தார் என்றும் அந்த நூல் சொல்கிறது. வங்கத்தை ஒட்டியுள்ள மால்வா பகுதியின் கவர்னராக இருந்த, மகன் முராத்துக்கு, அக்பர் எழுதிய கடிதம், நூலின் முக்கியப் பகுதி. அக்கடிதத்தில் மத வேறுபாடுகளை, அரசு நிர்வாகத்தில் புகுத்தக்கூடாது. மதம், நிர்வாகத்தை சீர்கெடுக்கும். மதம் வேறு, நிர்வாகம் வேறு என, இருக்க வேண்டும். முடிவுகளை பலருடன் ஆலோசித்து எடுக்க வேண்டும். தன்னிச்சை முடிவு சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும். நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தாலும், தவறு செய்தால், மன்னிப்பு கேட்க தயங்கக்கூடாது என, அக்பர் அறிவுறுத்தியுள்ளார். ஜாதியை நீக்கவும் அக்பர் முயன்றுள்ளார். சண்டால் என்ற தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த, கித்மத் ராயை, தனது மெய்க்காப்பாளர்களின் தலைவராக நியமித்துள்ளார். தான் விரும்பியவற்றை ஓவியங்களாக ஆவணப்படுத்த, பல்லக்கு தூக்கியின் மகனான தஸ்வந்தை நியமித்திருந்தார். இவர்கள் தவிர, ராஜா தோடர்மால், பீர்பால் போன்ற இந்துக்களையும் அரசவையில் வைத்திருந்தார் அக்பர் என, இந்நூல் விவரிக்கிறது. -அழகிய பெரியவன், எழுத்தாளர். நன்றி: தினமலர், 31/8/2014.