பாரதிதாசன் கவிதைகள்
பாரதிதாசன் கவிதைகள் (பாவேந்தர் பாடல்களின் முழுத்தொகுப்பு), தொகுப்பாசிரியர்-கவிஞர் சுரதா கல்லாடன், மணிவாசகர் நூலகம், சென்னை 108, பக். 804, விலை 600ரூ.
1920 முதல் 1978 வரை வெளியான பாவேந்தர் பாரதிதாசனின் அனைத்து நூல்களும் அடங்கிய முழுத்தொகுப்பு. அவரது முழு ஆளுமையை விவரிக்கிறது. கற்பகத்தின் நற்குளிர் கிடப்பதென்று உளத்து எழுந்த சுப்புரத்தினம் உரைத்த நற்பதத்தை உச்சரிப்பீர் என்று தன்கவியை வியக்கும் ஆன்மிகக் கவிஞராக இருந்தவர் (மயிலம் ஸ்ரீசிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம்) முற்றிலும் நாத்திகராக மாறி, சுயமரியாதை இயக்கத்தோடு இணைந்து தமிழுக்காக தமிழருக்காகப் பாடிய பாடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில். ஒவ்வொரு நூலும் வெளியான ஆண்டுகளின் வரிசைப்படி இந்த தொகுப்பைத் தயாரித்துள்ளனர். இருப்பினும், இந்தக் கவிதைகள் எப்போது எழுதப்பட்டன. எந்த நூல்களில் பிரசுரமாகின போன்ற தகவல்களையும் தந்திருக்கலாம். குறிப்பாக புகழ் மலர்கள், நாள் மலர்கள் தொகுப்பில் இதற்கான தேவை உள்ளது. பாரதிதாசன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். விருதைகளையும் பாராட்டையும் எதிர்பார்க்காதவர். அந்த வெள்ளை உள்ளத்தை நாள் மலர், புகழ் மலர் தொகுப்பில் பார்க்க முடிகிறது. நாள் மலர் என்பதைக் காட்டிலும் நெருப்பு மலர் என்றே அவரைச் சொல்லாம். நன்றி: தினமணி, 31/12/2012,
—-
பாரதியார் கதைக்களஞ்சியம், ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லைன், சி.ஐ.டி நகர், சென்னை 35, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-810-8.html
என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிரஞ்சீவிக் கவிதைகளைப் படைத்த மகாகவி பாரதியார், அற்புதமான கதைகளையும் எழுதியுள்ளார். இரண்டே பக்கங்கள் கொண்ட சிறிய கதைகளையும் எழுதியிருக்கிறார். நூற்றுக்கு மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குறுநாவல்களையும் படைத்துள்ளார். 816 பக்கங்கள் கொண்ட இந்தப் பெருநூலில் 59 கதைகள் உள்ளன. இந்தக் கதைகளைத் தொகுத்து, புத்தகமாக வெளியிட்டு இருப்பவர் நல்லி குப்புசாமி செட்டியார். பாரதியார் மீது கொண்ட எல்லையற்ற பக்தியினால், பாரதியார் படைப்புகளை புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார். இப்போது வெளியிட்டுள்ள பாரதியார் கதைக் களஞ்சியம் அந்தப் புத்தகங்களுக்கெல்லாம் சிகரம்போல விளங்குகிறது. ஏனென்றால் பாரதியார் தம் வாழ்நாளில் 1905ம் ஆண்டு முதல் 1920வரை எழுதிய எல்லாக் கதைகளும் இந்த நூலில் அடங்கியுள்ளன. நன்றி: தினத்தந்தி, 26/12/2012