பாலஸ்தீன வரலாறு முதல் பாகம்
பாலஸ்தீன வரலாறு முதல் பாகம், பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, புத்தொளி பதிப்பகம், சென்னை, பக். 168, விலை 80ரூ.
மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரான இந்நூலாசிரியர், கல்வி, அரசியல், ஆன்மிகம், பேச்சு, எழுத்து, ஆய்வுத்திறன்… என்று பன்முகத் தன்மை கொண்டவர். இவர் இந்நூலில் அரபுலகில் தோன்றிய இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம் ஆகிய முப்பெரும் மதங்களுக்கும் புராதான தொடர்புடைய நாடாக விளங்கும் பாலஸ்தீனத்தின் தொடக்க காலம் முதல், 13-ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றை எளிமையாக எடுத்துரைத்துள்ளார். இந்நாட்டின் பிரசித்தி பெற்ற நகராகிய ஜெருஸலத்தில்தான், இந்த முப்பெரும் மதங்களும் சொந்தம் கொண்டாடும் புனித ஆலயங்களும் உள்ளன. இப்புனித ஆலயங்கள் எப்படி, என்ன காரணங்களுக்காக உருவாகின? இந்நாடு எந்தெந்த காலகட்டங்களில் யார் யார் வசம் இருந்தது? உண்மையில் யூதர்கள் இந்நாட்டுக்குச் சொந்தம் கொண்டாட உரிமையுள்ளதா? கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர்களின் வசம் இந்நாடு எப்படி வந்தது? அங்கு அவர்களின் ஆட்சி எப்படி இருந்தது? இதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பலவற்றையும் முஸ்லிம்கள் வெற்றி கொண்ட விபரம்; 11-ஆம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்த விபரம்; இதில் எகிப்திய அதிபர் சலாஹுத்தீனின் வீரதீரமிக்க பங்களிப்புகள்; இவருக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள்; மங்கோலியர்களின் அட்டகாசம்… என்று பல்வேறு வரலாற்றுச் செய்திகளை புள்ளி விபரங்களுடன் ஆசிரியர் இந்நூலில் விறுவிறுப்பான நாவலைப் போன்று விவரித்துள்ளது சிறப்பானது. -பரக்கத். நன்றி: துக்ளக், 18/3/2015.