வடகரை
வடகரை, டாக்டர் மு. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். அகநி, வந்தவாசி, விலை 400ரூ.
ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் மு. ராஜேந்திரன் எழுதியுள்ள வடகரை என்ற ஒரு வம்சத்தின் வரலாறு நூல். அவரது குடும்பத்தினரின் 600 ஆண்டு வம்ச வரலாறு மட்டுமல்ல, தென் மாவட்டங்களின் குறிப்பாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி போன்ற மாவட்டங்களின் கலாச்சார வரலாறு. ஏதோ காதில் விழுந்த செய்தியாக எழுதாமல் 600 ஆண்டு சம்பவங்களையும், ஆதாரத்தோடு அத்தனை விவரங்களையும் திரட்டி எதையும் ஒளிக்காமல் எழுதியிருக்கிறார். குடும்பங்களில் இன்று இழந்து கொண்டு இருக்கும் பாசப்பிணைப்புகள் எப்படி இருக்க வேண்டும்? என்பதை இந்த நூலில் குறிப்பிட்டுள்ள குடும்பங்களின் வாழ்க்கை பல பாடங்களை காட்டுகிறது. படிக்கத் தொடங்கியது முதல் 500 பக்கங்களுமே பரபரப்பாக ஆர்வத்துடன் படிக்க வைத்தாலும் இறுதியில் கண்ணீரோடு முடிக்கவைத்து இருக்கிறார். மறக்க முடியாத நூல் இது. நன்றி: தினத்தந்தி, 11/3/2015.
—-
அவ்வையார் நூல்கள், சுரா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
திருக்குறளுக்கு அடுத்தபடியாக, மக்களுக்கு நீதிநெறிகளை எடுத்துக்கூறும் சிறந்த நூல்கள் அவ்வையாரின் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி முதலியவை. “அறம் செய விரும்பு”, “ஆறுவது சினம்”, “ஊக்கமது கைவிடேல்” என்று எளிமையாக – அதே சமயம் நெஞ்சில் பதியும்படி நீதிகளை போதித்த அவ்வையாரின் நூல்கள், புதுமையான வடிவமைப்பில், ஒரே புத்தகமாக வெளிவந்துள்ளது. (1) அவ்வையாரின் பாடல்கள், (2) அவற்றுக்கு தமிழில் பொருள் (3) ஆங்கிலம் மட்டும் அறிந்தவர்கள் அவ்வையார் பாடல்களை தெரிந்து கொள்ள வசதியாக, எழுத்துக்கள் ஆங்கிலத்திலும், உச்சரிப்பு தமிழிலும் இருக்கும் அமைப்பு (4) ஆங்கிலத்தில் பொருள் ஆகியவை இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறப்பாக எழுத்தாக்கம் செய்துள்ள செ.நாராயண சாமி பாராட்டுக்குரியவர். நன்றி: தினத்தந்தி, 11/3/2015.