பிருகு முனிவரின் பிருகு சம்ஹிதா

பிருகு முனிவரின் பிருகு சம்ஹிதா, எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன், குமரன் பதிப்பகம், சென்னை, பக். 888, விலை 500ரூ.

சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகு முனிவர், பிரம்மாவின் புத்திரர். ஜோதிட ஞானத்தின் கரையற்ற கடல் போன்றவர் என போற்றப்படுபவர். அவர் வடமொழியில் இயற்றிய இந்த நூல், மிக எளிமையாகவும், அருமையாகவும், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. ஒரு லக்னத்திற்கு, 108 வித பலன்கள். இப்படி 12 லக்னங்களிலும், ஒன்பது கிரகங்கள் இருப்பதால் விளையும் பயன்கள் என, 1296வித பலன்களை, பிருகு முனிவர் இந்த நூலில் விவரித்துள்ளார். ஜோதிடம் கற்போருக்கு ஒரு தெளிவான வழிகாட்டி இது. அதேசமயம் இந்த பலன்களை, முடிந்த முடிவாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. உதாரணத்திற்கு, துலா லக்னத்திற்கு ஏழில் சனி நீச்சமாக இருந்து, அந்த வீட்டிற்குரிய செவ்வாய், மகரத்தில் உச்சமாகவோ, விருச்சிகத்தில் ஆட்சியாகவோ இருந்தால், அப்போது சனிக்கு நீச்ச பலனைச் சொல்ல முடியாது. நீச்ச பங்கம் ஏற்பட்டு ராசியாக மாறிவிடும். எனவே, இந்த நூலை ஓரளவு நல்ல வழிகாட்டியாக எடுத்துக்கொள்ளலாம். நல்ல கட்டமைப்பில் நூலின் தயாரிப்பு வெகு தரமாக அமைந்திருக்கிறது. -கே.சி. நன்றி: தினமலர், 22/6/2014.  

—-

அறிவில் சிறந்த அன்னை ஆயிஷா, யுனிவர்ஷல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 75ரூ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். இவர் நபிகளாரின் நெருங்கிய தோழர்களில் ஒருவரும், முதல் கலீபாவுமாகிய அபூபக்கர் சித்தீக் அவர்களின் மகளாவார். அன்னை ஆயிஷா நபி பெருமானாருடன் 9 ஆண்டுகளும், நபிகளாரின் மறைவுக்குப் பிறகு 40 ஆண்டுகளும் வாழ்ந்தார். அன்னை ஆயிஷா மூலமாகத்தான் நமக்கு ஏராளமான ஹதீஸ்கள் (நபி மொழி தொகுப்பு) கிடைத்துள்ளன. மார்க்கம், ஒழுக்கம், தாய்மை, அரசியல், சமூகப்பண்பு, இலக்கியம் ஆகியவற்றில் பெண்ணுலகிற்கு முன்மாதிரியாக வாழ்ந்த அன்னை ஆயிஷாவின் வரலாற்றை எழுத்தாளர் சையத் இப்ராகீம் எளிய தமிழில் தந்திருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 25/6/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *