பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 108, விலை 75 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-082-3.html
ஆங்கிலத்தில் நீங்கள் எழுதியதில் ஒருவர் குற்றம் கண்டுபிடித்தால், கூனிக்குறுகிப் போகிறீர்கள். ஆனால், தமிழில் தவறு இருந்து, அதை யாராவது சுட்டிக்காட்டினால், ‘ஐ டோண்ட் நோ தட் மச் தமிழ்’ என்று பெருமையாகச் சொல்வீர்கள். தாய்மொழியில் பேச, எழுதத் தெரியாததுகூட பெருமையாகச் சொல்வீர்கள். தாய்மொழியில் பேச, எழுதத் தெரியாததுகூட பெருமையாக ஆனது தமிழ்ச் சமூகத்தில் மட்டும்தான். பள்ளியில், கல்லூரியில், பட்டங்கள் பெறுவதில், வேலை பார்க்கும் இடத்தில், கோவிலில், நீதிமன்றங்களில் என அனைத்து இடங்களிலும் தமிழ் தள்ளிவைக்கப்பட்டதால், கடந்த பல 10 ஆண்டுகளாக தீண்டத்தகாத மொழியாக தமிழ் மாறிப்போனது. தமிழ் பேசத் தெரிந்தவர்களுக்குக்கூட சுத்தமாக, அதற்கான உச்சரிப்புடன் பேச வரவில்லை. ழ, ள, ல… மூன்றுக்குமான உச்சரிப்பை உணர்ந்து சொல்ல வரவில்லை. தமிழை எழுதத் தெரிந்தவர்களுக்குக்கூட சரியாக எழுத இயலவில்லை. எந்த இடத்தில் ‘ற’ எந்த இடத்தில் ‘ர’ என்ற வேறுபாடு உணரவில்லை. மொத்தத்தில் தமிழ் எப்படியோ தன்னை வாழவைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறது. அதைப் பார்த்து பழந்தமிழ்ப் புலவர்கள் மனம் நொந்து அமைதியாகிவிட்டனர். சிலர் கற்பிக்கப் புறப்பட்டனர். அப்படிக் கிளம்பியவர்களில் ஒருவர், ஞானச்செல்வன்; வாரம்தோறும் ‘தினமணி கதிர்’ இதழில் அவர் எழுதிக்காட்டிய தமிழ்க் கட்டுரைகள், நேரடியாக நடத்திய தமிழ் வகுப்புப் பாடங்களாகவே இருந்தன. ‘என் வீடு அருகாமையில் உள்ளது’ என்று எழுதினால் பக்கத்தில் இருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால், அருகாமை என்றால் அருகில் இல்லாமை என்று பொருள். இப்படி ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளை உணர்த்தி சொற்றொடர்கள் அமைத்து விளக்கம் சொல்கிறார் ஞானச்செல்வன். எந்த இடத்தில் ஒற்றுப் போடவேண்டும், எங்கு தேவை இல்லை என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளையும் கொடுக்கிறார். ‘ஒற்று மிகக்கூடாத இடத்தில் ஒற்றெழுத்துப் போட்டு எழுதி அந்தச் சொல் இன்று எங்கும் நீக்கமற நிறைந்துவிட்டது’ என்கிறார். ‘சின்னத்திரை என்றால் ஏதோ ஒரு சின்னம் வரையப்பட்ட திரை என்று பொருள். எனவே, அதைச் சிறிய திரை என்றே எழுதவேண்டும்’ என்கிறார். அதேபோல், தொலைப்பேசி என்றே சொல்லவேண்டும். தொலைபேசி என்றால் பேசித்தொலை என்று பொருள். கோயில் என்று அழைப்பது தவறானது. கோவில் என்றே சொல்லவேண்டும்… இப்படி ஏராளமான உதாரணங்கள் இந்த நூல் முழுவதும் இருக்கின்றன. பேசுவதிலும் எழுதுவதிலும் உள்ள பிழைகளைக் களைய இவர் ஒரு வழிமுறை சொல்கிறார். ‘ஒற்றுப்பிழைகளைப் பொறுத்தவரையில் நாம் இயல்பாக வாய்விட்டுப் பேசிப் பார்த்தாலே எங்கு வல்வொற்று (க். ச், த், ப்) மிகும் என்பதை அறியக்கூடும்’ என்கிறார். ஒரு செடியில் உள்ள இலையைக் குறிக்க தமிழில், ஆறு சொற்கள் இருக்கின்றன. துளிர்விடும் நிலையில் இருப்பது துளிர், சற்றே வளர்ந்து தளிர்ப்பது தளிர், இளம்பச்சை நிறத்தை அடையும்போது கொழுந்து, முழுப்பச்சை அடையும்போது இலை, அது மஞ்சளாக மாறும்போது பழுப்பு, காய்ந்து விழும்போது சருகு. இப்படிப்பட்ட சொற்களின் வளம் உள்ளதைப் பார்த்துத்தான் ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’ என்று பாரதி பாடினார். அந்தச் சொல்லை சரியாகப் பேசி, எழுதினாலே அது தமிழுக்குச் செய்கின்ற பெருந்தொண்டு. – புத்தகன் நன்றி: ஜூனியர் விகடன் 31-10-12