பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல்

பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல், பிளாக்ஹோல் பப்ளிகேஷன், 7/1, மூன்றாவது அவென்யூ, அசோக் நகர்,சென்னை – 83, விலை 100 ரூ.

எகிப்தில் உள்ள பிரமிடுகள், கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எகிப்திய மன்னர்கள், அரசிகள் ஆகியோரின் சடலங்களைப் பாதுகாக்க இந்த பிரமிடுகள் கட்டப்பட்டன. சடலங்களுடன் உள்ளே வைக்கப்பட்ட தங்கம், வைரம், வைடூரியம் முதலிய விலை உயர்ந்த பொருட்கள் பிற்காலத்தில் கொள்ளையடிக்கப்பட்டன. மாலை நேரத்துக்குப் பின் பிரமிடுக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பால்பிரண்டன் என்ற இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி, இரவு நேரத்தில் பிரமிடுக்குள் தங்கினார். அங்கு கெட்ட ஆவிகளும், நல்ல ஆவிகளும் அலைந்து திரிவதை உணர்ந்தார். மேலும் பல அதிசய அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டன. இதுபற்றி என். கணேசன் எழுதிய இந்த நூல், நமக்கு புதிய அனுபவத்தைத் தருகிறது. படிக்கவேண்டிய புத்தகம்.  

சைவ இலக்கிய வரலாறு, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32பி கிருஷ்ணா தெரு, பாண்டி பஜார், சென்னை – 17, விலை 250 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-809-6.html

தமிழ் இலக்கிய வரலாற்றில், பக்தி இலக்கியங்களுக்கு முக்கிய இடம் உண்டு. கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல், 10-ம் நூற்றாண்டு வரை திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் முதலான தமிழ்ச்சான்றோர்கள் ஏராளமான பாடல்கள் புனைந்து, இலக்கியத்துக்கு வளம் சேர்த்தனர். இந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் பற்றியும், எழுதியவர்கள் பற்றியும் இந்நூலில் விவரிக்கிறார் தமிழறிஞர் அவ்வை துரைசாமிப்பிள்ளை. பழந்தமிழ் இலக்கியங்களில் ஒரு பகுதியை அறிந்துகொள்ள இந்நூல் உதவுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் இந்நூல், நவீன வடிவமைப்பில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.  

வண்ண நிலவன் சிறுகதைகள், நற்றிணை பதிப்பகம், 243ஏ, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 5, விலை 200 ரூ.

நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் நிறைய எழுதி, இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தேடிக்கொண்டிருப்பவர் வண்ண நிலவன். சில இலக்கியப் பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். ருத்ரையாவின் “அவள் அப்படித்தான்” திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். பல துறைகளில் பணிபுரிந்தாலும், சிறுகதை ஆசிரியராக உச்சத்தைத் தொட்டவர். இப்போது, “தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை” என்ற நீண்ட தலைப்புடன் வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுதியில், பல அருமையான கதைகள் உள்ளன. உதாரணமாக தலைப்புக்குரிய கதை, நெல்லை வட்டாரத் தமிழில் எழுதப்பட்டது. எதிர்பாராத திருப்பத்தை, கடைசி பாராவில் நறுக் என்று சொல்கிறார். “மனைவியின் நண்பர்” கதையில் சம்பவங்கள் அதிகம் இல்லை என்று பலர் நினைக்கலாம். ஆனால் நல்ல சிறுகதைக்கான இலக்கணப்படி அக்கதை அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி 31-10-12      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *