புகை நடுவில்
புகை நடுவில், கிருத்திகா, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 254, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-194-0.html
மனித உறவுகளை அரசியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் விவரிக்கும் நாவல்தான் புகை நடுவில். இந்த நாவல் கோர்வையாக, சம்பவங்களின் தொடர்ச்சியாக இல்லாமல், விவரங்களின் தோரணமாக அமைந்துள்ளது. நடுத்தர வர்கக்த்தின் குறிப்பாக அந்த வர்க்கத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கையை, கலாசாரத்தை பிரதிபலித்துள்ளது.‘ ஆண், பெண் உறவு குறித்து பல்வேறு தளங்களில் நாவல் அலசுகிறது. அது சில இடங்களில் தனிமதவாதமாகவும், பல இடங்களில் தர்க்கரீதியாகவும் இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட விஷயங்களை உரையாடல்களாக ஆக்கியிருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. இல்லையேல் தத்துவச் சிக்கல்களுக்கு நாவல் இடமளித்திருக்கும். விதர்பன் சந்திராவதி, சாரதா சந்தோஷ்லால், சத்தியன் நிர்மலா, லட்சமி ஸ்ரீராம் அகீய பாத்திரங்களின் உரையாடல்கள் வழியாக இதைக் கனகச்சிதமாக செய்திருக்கிறார் நாவலாசிரியர். வெவ்வேறுவிதமான மண வாழ்க்கையைப் பற்றியும் பேசுகிறது. பெண்கள் முன்னேறி வரும் சூழல், ஆண்கள் தங்களை அதிமேதாவிகளாக நினைத்துச் செய்யும் தவறுகளை ஏளனம் செய்தல் என்று ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களின் வாழ்க்கை நிலையைப் பதிவு செய்திருக்கிறது நாவல். நன்றி: தினமணி, 2/4/12.
—-
திருக்குறள் பதிப்பு, வரலாறு-தி. தாமரைச்செல்வி, செயராம் பதிப்பகம், 125, லால்பகதூர் சாஸ்திரி வீதி, புதுச்சேரி 1, பக். 496, விலை 500ரூ.
தமிழ் இலக்கியங்களுள் முதன்முதலாக அச்சு வடிவம் பெற்றவை குறளும், நாலடியாரும். 1812ஆம் ஆண்டில் குறள் முதல் பதிப்பு வெளியானது. குறளுக்கு மட்டுந்தான் பழைய உரையாசிரியர்களும், அவர்களை அடியொற்றி காலந்தோறும் பலரும் தொடர்ந்து உரையெழுதி வருகின்றனர். இந்த 200 ஆண்டுகளில் குறள் பதிப்பாக வெளிவந்துள்ள நூல்களின் எண்ணிக்கை 500ஐ நெருங்குகிறது. குறளுக்கு (தமிழில் மட்டுமின்றி ஆங்கில மொழியிலும்) தோன்றிய பதிப்புகளைத் தொகுத்து ஆவணப்படுத்துதல் மிகக் கடினமான பணி. அப்பணியை பிரமிக்கத்தக்க வகையில் செய்துள்ளார் நூலாசிரியர். திருக்குறள் பதிப்பாசிரியர்கள் பற்றிய குறிப்புகள், பதிப்பு வரலாறு, பதிப்பு வகைகள், மூலப் பதிப்புகளின் பட்டியல், உரைப் பதிப்பு, பிறமொழிகளில் குறள், ஆய்வுப் பதிப்பகளின் இன்றியமையாமை, பழம் பெரும் உரையாசிரியர்களைத் தழுவிய பதிப்பு நூல்கள் எனப் பல்வேறு அரிய தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது இந்நூல்.‘ மேலும் திருக்குறள் பதிப்பு வரலாறு அட்டவணை (ஆண்டு நிரலாக) நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளது. குறள் தொடர்பான ஆய்வுப் பணியில் ஈடுபடுவோருக்கு மிகவும் பயனுள்ள நூல். நன்றி; தினமணி, 25/3/13.