புதுமைப்பித்தன் முத்திரைக் கதைகள்
புதுமைப்பித்தன் முத்திரைக் கதைகள், பதிப்பாசிரியர் இரா. மோகன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 152, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-784-0.html
தமிழ்ச் சிறுகதைகளில் மின்சாரம் பாய்ச்சிய எழுத்தாளர் புதுமைப்பித்தனின் பதினான்கு சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. புதுமைப்பித்தனின் பெயரைச் சொன்னதுமே ஒரு வாசகனின் நினைவில் வரக்கூடிய காஞ்சனை, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், பொன்னகரம் போன்ற கதைகளும் ஒரு விமர்சகன் குறிப்பிடக்கூடிய சாப விமோசனம், இது மிஷின் யுகம், வாடா மல்லிகை போன்ற கதைகளும் அடங்கிய தொகுப்பு இது. புதுமைப்பித்தனின் எழுத்திலிருக்கும் நகைச்சுவையும், நையாண்டியும் எத்தனை முறை படித்தாலும் ரசிக்க வைக்கிறது. அதே சமயம், சில உரையாடல்கள் முகத்தில் அறைவது போலவும் உணர வைக்கிறது. உதாரணமாக சாபவிமோசனம் கதையில் அகலிகை சீதையிடம் தான் தீக்குளித்த நிகழ்ச்சியைச் சொல்ல துடித்துப் போன அகலிகை அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய்? என்று கேட்க, அவர் கேட்டார் நான் செய்தேன் என்று சீதை அமைதியாகச் சொல்ல, அவன் கேட்டானா? என்று கத்தினாள் அகலிகை என்று எழுதியிருப்பது ஒரு சோறு பதம். செல்லம்மாள் கதையில் செல்லம்மாள் தன் கணவனிடம் ஊருக்குப் போய்விட்டு வரும்போது நெல்லிக்காய் அடையும் ஒருபடி முருக்கவத்தலும் எடுத்துக் கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறாள். அதைவிட அவள் புலிப்பால் கொண்டு வரும்படி கேட்டிருக்கலாம். பிரம்ம வித்தை கற்று வரும்படி சொல்லியிருக்கலாம். அவை அவருக்கு எட்டாக் கனவாகப் பட்டிரா என்று புதுமைப்பித்தன் எழுதும் இயல்பான நகைச்சுவை இன்றைய எழுத்தாளர்களும் பயில வேண்டியது. நல்ல எழுத்தாளரின் நல்ல கதைகளடங்கிய நல்ல தொகுப்பு. நன்றி: தினமணி, 24/9/2012.