புதுவை வரலாற்றுச் சுவடுகள்

புதுவை வரலாற்றுச் சுவடுகள், நந்திவர்மன், சேகர் பதிப்பகம், சென்னை, பக். 244, விலை 170ரூ.

புதுவையின் தொடர்ச்சியான வரலாறாக இல்லாமல், புதுவையில் தங்கியிருந்த அறிஞர்கள், புதுவையில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள், புதுவைக்கு வந்த கப்பல்கள் என்று புதுவையோடு தொடர்புடையவை பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அலக லல்ல லாடக நி என்று தியாகராஜ கீர்த்தனையைப் பாவேந்தர் பாரதிதாசன் தமிழாக்கம் செய்தள்ளார். பிரெஞ்சுக் கவிஞர் ப்ளோரியான் எழுதிய கவிதையை செம்மறியாடும் நாயும் என்ற தலைப்பில் பெரும்புலவர் மு.த. வேலாயுதனார் மொழியாக்கம் செய்துள்ளார் என்பன போன்ற சுவையான தகவல்கள் புதுவையில் மொழியாக்க முயற்சிகள் என்ற கட்டுரையில் தரப்பட்டுள்ளன. அன்னை தெரசா நான்கு முறை புதுவைக்கு வந்தது, திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ் துரையைச் சுட்டுக் கொல்ல வாஞ்சிநாதனுக்கு வ.வே.சு.அய்யர் புதுவை கருவடிக்குப்பம் ஓடைப் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது, பிரெஞ்சுக்காரரான ழான் திலோசு எழுதிய வரலாற்றுப் புத்தகத்தில் புதுச்சேரியை நேரான வீதிகளோடு வடிவமைத்தவர்கள் டச்சுக்காரர்கள் என்று குறிப்பிட்டிருப்பது ழன்லக் செவிலியே என்ற பிரெஞ்சுக்காரர் 12 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கு சேனாவரையர் எழுதிய உரையை பிரெஞ்ச் மொழியில் மொழிபெயர்த்தது, விவேகானந்தர் 2 நாட்கள் புதுச்சேரியில் தங்கியிருந்தது, புதுவையில் பாரதியார், அரவிந்தர் வாழ்ந்த காலத்தின் நிகழ்ச்சிகள் எனப் பலருக்கும் தெரியாத ஏராளமான பல அரிய தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. நன்றி: தினமணி, 15/12/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *