எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்

எவராலும் கற்பனை செய்ய முடியாத நான், தொகுப்பு ஷோபாசக்தி, கருப்புப் பிரதிகள், சென்னை, விலை 140ரூ.

ஈழம் பேசிப் பேசி மாளாத நிலம். அதன் கடந்தகாலச் சோகங்களையும் தவறுகளையும் வெளிப்படையாகப் பேசுவதன் மூலமாக எதிர்கால அரசியல் தெளிவுக்கு இட்டு நிரப்புபவையாக சிலரது படைப்புகள் மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட நான்கு ஆளுமைகளைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார் ஷோபாசக்தி. கவிஞர் கருணாகரனும் தமிழ்க்கவியும் தமிழ் தேசியம் சார்ந்த ஆதரவு தளத்தில் இயங்கியவர்கள். புலிகள் இயக்கத்துடன் கடந்த காலத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள். பழ. ரிச்சர்ட், இடது சாரியாக அறியப்பட்டவர். ஜனதா விமுக்தி பெரமுனாவிலும் இருந்தவர். பெண்ணுரிமை மற்றும் இஸ்லாமியர் நலன் சார்ந்து பேசக்கூடியவர் ஸர்மிளா ஸெய்யித். உம்மத் நாவலை எழுதியவர் இவர். இவர்கள் அளித்த பேட்டிகள் பற்றிய தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார் கவிஞர் நிந்தன். இந்த அடிப்படையில் ஈழப் பிரச்னையை ஆறுபேர் பார்வையில் பார்க்க அடித்தளமாக அமைந்துள்ளது இந்தத் தொகுப்பு. அதிகாரக் குவிமையமாக பிரபாகரன் இருந்தார் என்ற குற்றச்சாட்டை கடுமையாக மறுக்கிறார் தமிழ்க்கவி. அவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பவர் அல்ல. ஒரு மத்தியக் குழுவை வைத்திருந்தார். அவர்களை ஆலோசித்தே முடிவுகளை எடுத்தார் என்கிறார். தன்னுடைய பிள்ளையை இயக்கம் வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று போராளியாக்கியதை கடுமையாக விமர்சிக்கும் தமிழ்க்கவியிடம் இருந்துதான் இந்த வார்த்தைகளும் வருகின்றன. தானும் ஒரு பெண் என்றாலும், தாய்மை என உலகால் புகழப்படும் பெண்களை அதிகாரம் எப்படிப் பேய்களாக மாற்றியிருக்கிறது என்பதை அங்கு கண்டுகொண்டேன் என்பதையும் நேர்மையுடன் பதிவு செய்கிறார். புலிகள் இயக்கத்தின் இதழியல் பிரிவில் இருந்த கருணாகரன், அப்போதைய செயல்பாடுகளை விவரிக்கிறார். ராணுவமையத்துக்கு அமைப்பு அடிமையாகி இருந்ததை ஒப்புக்கொண்டு விமர்சனங்களை வைக்கிறார். ஸர்மிளா ஸெய்யித், மதவாதக் கொள்ளை நோய்க்கு எதிரான தனது கர்ஜனையை இதிலும் தொடர்கிறார். இலங்கையை பௌத்த நாடாகவும், தமிழர்களும் இஸ்லாமியர்களும் அரசியல் ஒருமைப்பாட்டுடன் இருக்க முடியாது என்றும் அவர் சொல்வது அவசரப்பட்டா அல்லது விரக்தியாகவா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். ஜே.வி.பி. மக்கள் போராட்ட இயக்கம், முன்னிலை சோஷலிசக் கட்சி போன்ற இடதுசாரி இயக்கங்களும் சிங்களமயமாகச் செயல்பட்டு வருவதை ரிச்சர்ட் பேட்டி அம்பலப்படுத்துகிறது. இடது இயக்கம் சிங்களத் தேசியவாதத்தைக் கொண்ட இடது இயக்கமாகவே அமையும் என்று மிகச் சரியாகவே சொல்கிறார். மொத்தத்தில் கடந்த காலத்தை வெறுப்பு இல்லாமல் பேசகிறது இந்தப் புத்தகம். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 23/11/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *