புறநானூறு (பழைய உரையுடன்)
புறநானூறு (பழைய உரையுடன்), டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், பக். 806, விலை 400ரூ.
சங்க இலக்கியம், எட்டுத்தொகையில் ஒன்று புறநானூறு. அதன் முதற்பதிப்பு, தமிழ்த்தாத்தா உ.வே.சா., வால், 1894ல் வெளியிடப்பட்டது. அந்த பதிப்பு, புதிய பல இணைப்புகளுடன், எட்டாவது பதிப்பாக 2014ல் வெளிவந்துள்ளது. புறநானூறு மூலம் மட்டும், புறநானூறு மூலமும் உரையுமென்று, எத்தனை எத்தனையோ பதிப்புகள், வேறு வேறு நிறுவனத்தாரால் வெளிவந்துள்ளன. பழந்தமிழகத்தின் வரலாறு, கலை, தொழில், வாணிகம், கல்வி, ஆட்சி, பழக்க வழக்கம், பண்பாடு போன்ற பலவும் புறநானூற்றில் பொதிந்து கிடக்கின்றன. இந்த பதிப்பில், உ.வே.சா. எழுதிய முன்னுரை மட்டுமே 15 பக்கங்களில் விரிவாக அமைந்துள்ளது. புறநானூற்றுக்கு, மூலத்தோடு கிட்டிய பழைய உரை, இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. பழையவுரை இல்லாத பாட்டுகளுக்கு மட்டும், உ.வே.சா., உரை எழுதியுள்ளார். மூன்று பதிப்பு வரை, உ.வே.சா. எழுதிய முன்னுரைகள் இடம் பெற்றுள்ளன. புறநானூறு, பல புலவர்களின் பாட்டு தொகுப்பு. இதில் பாடிய புலவர்கள் வரலாறும், பாடப்பட்டோரின் வரலாறும், அரிதில் முயன்று ஆராய்ந்து, விரிவாக தமிழ்த்தாத்தா எழுதியவாறே தரப்பட்டுள்ளன. இந்த நூல் அளவுக்கு, பெரிதாகவும், பெருமை உடையதாகவும் இதுவரை வேறு ஒரு பதிப்பும் வந்ததில்லை. திணை, துறை விளக்கங்களும், சிறப்புச் செய்திகளும், பாட்டு முதற்குறிப்பகராதியும், சிறந்த பாடற் பகுதிகளும் அரும்பதப்பொருள் அகராதியும், நூலுள் இடம் பெற்று உள்ளன. உ.வே.சா., பெயரால் அமைந்த நூலக வெளியீடு மிக அருமையாக, அழகாக., நல்ல தாளில் அச்சுப்பிழைகளின்றி, தெளிவான எழுத்து வடிவத்தில், மிகக் குறைந்த செலவில் நமக்குக் கிட்டியிருப்பது தமிழர்தம் பேறு. பதிப்புக்கான நிதி உதவி செய்த பேருள்ளத்தையும் பாராட்ட வேண்டும். -கவிக்கோ ஞானச்செல்வன். நன்றி: தினமலர்,24/5/2015.