புலிகளின் புதல்வர்கள்
புலிகளின் புதல்வர்கள், பா. விஜய், புதிய தலைமுறை பதிப்பகம், பக். 164, விலை 275ரூ.
ஒன்றாக இணைந்து ஆட்சி நடத்த தெரியாத தமிழர்கள்? கவிஞராக அறியப்பட்ட பா. விஜய், இந்த புத்தகத்தில் ஒரு ஆய்வாளராகவும் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். 1800 ஆண்டுகளுக்கு முன், தமிழகம் எப்படி இருந்தது என்பதை இலக்கியம் மூலம் காட்சிப்படுத்தி உள்ளார். தமிழ் சினிமாக்களில் காட்சிப்படுத்தப்பட்டதை போன்று, பண்டைய தமிழ் சமூகமும், மன்னர்களும் இருந்ததில்லை. உடல் முழுதும் நகைகளை பூட்டிக்கொண்டு திரியவில்லை. மது குடித்தனர், மாமிசம் உண்டனர் என நிஜத்தை எடுத்துரைத்துள்ளார். அதற்கே அவருக்கு ஒரு சபாஷ். 1300 ஆண்டு கால யுத்தமுமே, சகோதர சண்டைகள்தான். புறநானூறு பூரிக்கின்ற படைப்பெல்லாம், ஓர் இனத்துக்குள் நடந்த ரத்தவெறி ஆட்டத்தைப் பற்றியதுதான் என்று திடமாய் தன் கருத்தை முன்வைக்கிறார் நூலாசிரியர். உருண்ட தலைகள் தமிழருடையவை. உருட்டிய கைகளும் தமிழருடையவையே. இதற்குப் பெயராக, நாம் பெருமைப்பட்டு சூட்டிக்கொண்டது தமிழர் வீரம். ஒன்றாக இணைந்து, ஆட்சி நடத்த தெரியாத அறியாமைக்கு, இன்னொரு அழகான இடுகுறிப்பெயர் இது. தென்தேசம் மட்டுமாவது ஒரு புள்ளியில் நின்றிருந்தால் 6000 மைல்தாண்டி வந்து ஆங்கிலேயன், தமிழனுடைய தலைமுடியைக்கூட வெட்டிப்பார்த்திருக்க முடியாது என ஆவேசப்படுகிறார். கரிகாலனின் அறிமுகத்தில் துவங்கும் இந்த புத்தகம், பங்காளி சண்டையில் மோதிக்கொண்ட நலங்கிள்ளி நெடுங்கிள்ளி. சுனாமியில் பலியான கிள்ளிவளவன். வரலாறே அறிய முடியாத கி.பி. 5-கி.பி.8 வரையிலான காலகட்டம். பராந்தகன் உருவாக்கிய சேத்தியாதோப்பு ஏரி என, வரலாற்றின் மேடுபள்ளங்களில் ஏறி இறங்கி, ராஜராஜ சோழன் என்ற அருண்மொழித்தேவன் ஆட்சி ஏறும்வரை வந்திருக்கிறார் விஜய். சோழ மன்னர்கள் வரலாற்றோடு, அன்றைய மருத்துவமுறை, அலங்காரங்கள், உணவுவகைகள் (அதில் பிரியாணியும் உண்டு) உள்ளிட்ட அன்றைய தமிழர்களின் வாழ்வியலை, எளிமையாக தந்திருக்கிறார். புத்தகத்தில் எழுத்தின் அளவு சிறியதாக இருப்பது மட்டுமே, சற்று அயர்ச்சியை தருகிறது. எண்ணற்ற தகவல்களை தேடி கண்டெடுத்த பா.விஜயின் உழைப்பு இந்த புத்தகத்தில் தெரிகிறது. நம் வரலாற்றை ஒப்பனை இல்லாமல் தெரிந்துகொள்ள, புலிகளின் புதல்வர்கள் வாசிக்கலாம். -சி. சுரேஷ். நன்றி: தினமலர், 10/8/2014.