இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி
இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரண்டாம் பகுதி), சையித் இப்ராஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 400, விலை 225ரூ.
இந்தியாவில் முகலாய அரசு உருவாகி வலிமை பெற்றது. பாபரின் ஆட்சி முதல் அவுரங்கசீப் ஆட்சி வரையிலான காலம் ஆகும். இக்காலத்தில் முகலாய மன்னர்கள் இந்தியாவில் அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், கலை, கட்டடக் கலை, ஆன்மிகச் சிந்தனை போன்றவற்றில் ஏற்படுத்திய பல்வேறு மாறுதல்களை இந்நூல் விரிவாகச் சொல்கிறது. அதைப்போல அவுரங்கசீப் காலத்துக்குப் பிந்தைய முகலாய ஆட்சியாளர்களின் காலத்தில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளும் கூறப்பட்டுள்ளன. முகலாய மன்னர்களின் ஆட்சி பற்றி எழுதப்பட்ட பல வரலாற்று நூல்கள் இதுவரை நேர்மையாக எழுதப்படவில்லை என்பது நூலாசிரியரின் கருத்து. வரலாற்று நூலாயினும் இந்நூலில் குறிப்பிடப்படும் பல தகவல்கள் படிப்பதை சுவையாக்குகின்றன. உதாரணமாக உதயபூரில் ஆட்சி செய்த வலிமை வாய்ந்த ராணா சங்ராம் சிங்குடன் போரிடுவதற்குத் தன் படைவீரர்களைத் தயார் செய்ய நினைத்தார் பாபர். அதற்குத் தானும் தனது படைவீரர்களும் மது அருந்தக்கூடாது என்று நினைத்தார். அவர் தமது படைவீரர்களை அழைத்து, என் அருமை வீரர்களே, நான் சில ஆண்டுகளாக மது அருந்திக் கொண்டிருந்தேன். இன்று முதல் நான் மது அருந்தமாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன் என்று உறுதி மொழி கூறினார். மதுபானம் அருந்தும் வெள்ளி தங்கக் கின்னங்களையெல்லாம் உடைத்தெறியும்படி கட்டளையிட்டார். ஒரு சமயம் ஒரு ராஜபுத்திர ராணி, அவரைத் (ஹுமாயுனை) தன் சகோதரர் எனக்கூறி, தன் எதிரிகளிடமிருந்து தன்னை மீட்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டாள். தன் கை வளையல்களையும் அனுப்பினாள். அச்சமயம் ஹுமாயூன் குஜராத் ஸுல்தான் பஹாதுர்ஷாஹ்ஹிவுடன் போர் புரிந்து கொண்டிருந்தார். ஆனால் அந்தப் போரை நிறுத்திவிட்டு, உடனே சென்று அந்த ராஜபுத்திர ராணிக்கு உதவி செய்தார். இவை போன்ற இதுவரை கேள்விப்பட்டிராத பல தகவல்கள் நூல் முழுவதும் கூறப்பட்டுள்ளன. நன்றி: தினமணி, 7/4/2014