ஒரு ஊர்ல ஒரு ராஜா ராணி
ஒரு ஊர்ல ஒரு ராஜா ராணி, கன்னிக்கோவில் ராஜா, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பக். 112, விலை 70ரூ.
சிறுகதைகள் மீது சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் எப்போதும் ஈர்ப்பு குறைந்து போனதில்லை. குழந்தைகளுக்கு கதைகள் சொல்லும்போது, ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் என்றுதான் பெரும்பான்மையான கதைகளின் துவக்கம் இருக்கும். இதை நம் வாழ்விலும் அனுபவித்திருப்போம். கன்னிக்கோவில் இராஜா எழுதியுள்ள ஒரு ஊர்ல ஒரு ராஜா ராணி சிறுகதை தொகுப்பில் இதுபோன்ற ஒரு கதையும் இடம் பெற்றுள்ளது. அதையே தொகுப்பிற்கு தலைப்பாகவும் வைத்துள்ளார். இதில் இடம் பெற்றுள்ள அனைத்து சிறுகதைகளும் சிறுவர் கதைகள். சிறுவர் இலக்கியம், வளரும் குழந்தைகளின் வாழ்க்கைக்கு பெரிய பங்களிப்பை செய்பவை. ஒவ்வொரு சிறுகதைகளும் நற்பண்புகளையும், நல்லுணர்வுகளையும், வாழ்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். அந்த வகையில் ஒரு ஊர்ல ஒரு ராஜா ராணி நல்ல தொகுப்பாக, ஓவியங்களுடன், வெளிவந்துள்ளது. சாகித்ய அகாதெமி விருது பெற்ற ம.இலெ.தங்கப்பா முன்னுரை வழங்கியுள்ளார். -சுவின். நன்றி: தினமலர், 10/8/2014.
—-
தென்னிந்திய திருவிழாக்கள், பி.வி.ஜெகதீசஅய்யர், .எஸ்.வெங்கடேஸ்வரன், சந்தியா பதிப்பகம்.
தென்னிந்திய மக்கள் கொண்டாடும் பண்டிகைகள், விரதங்கள் குறித்த புத்தகம் இது. சங்கராந்தி, மாசிமகம், வியாசபூஜை, ஆவணி மூலம், வரலட்சுமி விரதம், காயத்ரி ஜெபம், நவராத்திரி, ஆருத்ரா, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட 27 பண்டிகைகள், அப்போது கடைப்பிடிக்கப்படும் விரதங்கள், விரதத்திற்கான பின்னணி காரணங்கள், பண்டிகைகள் உருவான வரலாறு குறித்து எளிமையான நடையில் சுவாரசியமான தகவல்களுடன் வெளிவந்துள்ள புத்தகம். கடையில் இருந்து வரவழைத்த, துரித உணவை உண்டுவிட்டு, அவசர கோலத்தில் அலுவலகம் செல்லும் வழியில், கோவில் வாசல் வந்தஉடன், வாகனத்தில் சென்றுகொண்டே, கடவுளை பெயர் அளவுக்கு கும்பிடும் நபர்கள் படிக்க வேண்டிய புத்தகம். ஆதம்பாக்கம், பிருந்தாவன் நகர் நூலகத்தில் வாசிக்க கிடைக்கிறது. நன்றி: தினமலர், 10/8/2014.