புலி தடம் தேடி

புலி தடம் தேடி, ரத்த ஈழத்தில் 25 நாட்கள், மகா. தமிழ்ப் பிரபாகரன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 192, விலை 100ரூ.

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக எந்த அளவுக்கு இனவெறித் தாண்டவமாடுகிறது என்பதை நூலாசிரியர் தோலுரித்துக் காட்டியுள்ளார். இலங்கையின் பூர்வீகக் குடிமக்களாகிய ஈழத்தமிழர்கள் தங்களது தாய் மண்ணிலேயே ராஜபட்சவின் இனவெறி அரசால், உறவுகளையும், உடைமைகளையும் இழந்து, இன்று உணவுக்கே வழியில்லாமலும், உயிருக்கு உத்தரவாதமில்லாமலும் வாழ்வதை உலககுக்கு உரக்கத் தெரிவித்துள்ளார் நூலாசிரியர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ஈழத் தமிழர்கள் எப்படியெல்லாம் கொன்று குவிக்கப்பட்டனர். இன்றும் கொல்லப்படுகின்றனர் என்பதை அங்கு போர்க் களத்தில் இருந்தவர்களிடம் தகவலைப் பெற்று நூலாசிரியர் பகிரங்கப்படுத்தியுள்ளார். இலங்கை மண்ணில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியில் இதுவரை சிறிதளவே வெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது. பெரும் பகுதி குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த நூலின் மூலம் தெரிந்து கெள்ளும்போது மனித நேயம் படைத்த யாராலும் பதறாமல் இருக்க முடியாது. ராஜபட்ச அரசின் இனவெறிப் போரினால் ஈழ மண் தனது அடையாளத்தைத் தொலைத்து சின்னாபின்னமாகச் சிதறிக் கிடக்கிறது. ஈழ மண்ணில் எவ்வளவு விரைவாக சிங்கள ஆக்கிரமிப்பு நடைபெறுகிறது என்பதை நூலாசிரியர் நேரடியாகக் கண்டுணர்ந்து விவரித்துள்ளதைப் படித்து அறியும்போது மனம் கனக்கிறது. இலங்கை ராணுவத்தின் கண்களில் சாமர்த்தியமாக மண்ணை அள்ளித் தூவிவிட்டு 25 நாள்கள், ஈழ மண்ணின் மூலை முடுக்கெல்லாம் பயணித்து, அங்குள்ள கள நிலைமைகளை அறிந்து படைப்பாக அளித்துள்ள நூலாசிரியரின் அசாத்திய துணிச்சலைப் பாராட்டியே ஆக வேண்டும். இந்த நூல் தமிழோடு நின்றுவிடாமல், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, சர்வதேச சமூகத்தைச் சென்றடைய வேண்டும். அப்போதுதான் ஈழத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலக மக்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவ முடியும். நன்றி: தினமணி, 14/4/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *