தமிழில் ஒற்றுப்பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்
தமிழில் ஒற்றுப்பிழையின்றி எழுத மிக எளிய விதிகள், முனைவர் மணிமேகலை புஷ்பராஜ், பாவேந்தன் நினைவு அறக்கட்டளை, பக். 96, விலை 50ரூ.
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனாரின் திருமகள் மணிமேகலையார் படைத்தளித்துள்ள நூல் இது. தமிழ்மொழியின் சிறப்பில் துவங்கி, தமிழ் இலக்கணம் குறித்தும், ஒற்றுப்பிழைகள், வலி மிகுதல், வலி மிகாமை குறித்தும், தவறும் சரியும் ஆகும் சொற்கள் பற்றியும் எழுதி, தமிழின் தலையாய நூல்களையும் குறிப்பிட்டு நூல் நிறைவு பெறுகிறது. அறிஞர் பலர் தமிழில் பிழையின்றி எழுத வழிகாட்டியுள்ளனர். அந்த வரிசையில் அண்மையில் வெளிவந்த, பிழையின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம் நுலையடுத்து இந்நூல் வெளிவந்துள்ளது. நிரம்ப எடுத்துக்காட்டுகள், குழப்பம் தராத குறிப்புகள் கொண்டுள்ள இந்நூல், நல்ல தாளில் அருமையான அச்சு அமைப்பில் வெளிவந்துள்ளது. பாராட்டத்தக்க நல்ல முயற்சி. பயன்தரும் நல்ல நூல். -கவிக்கோ ஞானச்செல்வன். நன்றி: தினமலர், 27/4/2014.
—-
சாதனையின் மறுபெயர் சர்.சி.பி., ச. இராசமாணிக்கம், சந்தியா பதிப்பகம், பக். 200, விலை 165ரூ.
சிலர் புகழ் தேடி ஓடுவர். புகழ் சிலரைத் தேடி வரும். அப்படி, புகழ் தேடி வந்து, தனக்குப் பெருமை சேர்த்துக்கொண்டது சர்.சி.பி.யிடம் என்றால் மிகையாகாது. அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை மிகத் தெளிவான தமிழில் இந்நூலாசிரியர் தந்து, தமக்குப் பெருமை சேர்த்துக் கொண்டுள்ளன. திருவாங்கூர் சமஸ்தானத்தில், பத்து ஆண்டுகளுக்கு மேலாக, திவானாக இருந்ததும், அங்கு முதலில் மதிய உணவுத் திட்டத்தைத் துவங்கியதும், மேட்டூர் அணை, பைகாரா நீர்மின் அணை, கங்கை, காவிரி மற்றும் தென்னக நதிகளின் வரைவுத் திட்டங்களும் இவருக்குப் புகழ் சேர்த்தன என்று, இந்நூல் வாயிலாக அறிகிறோம். சர்.சி.பி. ராமசாமி அய்யரின் அருஞ்சாதனைகளையும், அவர் வாரி வழங்கிய நன்கொடைகளையும் படிக்கும்போது இன்றைய இளைஞர்கள் தவறாமல் படிக்க வேண்டிய நூல் இது என்று துணிந்து கூறலாம். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 27/4/2014.