பெயரற்றது

பெயரற்றது, சயந்தன், தமிழினி, 63, நாச்சியம்மை நகர், சேலவாயல், சென்னை 51, பக்.128, விலை-90ரூ.

போருக்குப் பிந்தையது ஈழத்துப் படைப்புகள், காத்திரமான யுத்த இலக்கியங்களாக உருவாகி வருகின்றன. சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழரான சயந்தன் எழுதியுள்ள பெயரற்றது. புலம்பெயர் இலக்கியத்தின் இன்னோர் உலகத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. மொத்தம் எட்டு கதைகள். அனைத்துமே போரின் வலிகளைப் பேசுகிறது. தமிழ் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ் என்ற சிறுகதை, புகலிடத்தில் மொழிப்பெயர்ப்பாளராக வேலை செய்யும் ஒருவருடைய குறிப்பு. தாய்நாட்டில் வாழ முடியாத சூழல் நிலவுவதை நிரூபித்தாக வேண்டிய நிர்பந்தம், தஞ்சம் கோருவோருக்கு உண்டு. இந்தக் கதையில் தஞ்சம் கோரும் பிரதீபன், ராணுவத்தால் ஏற்படும் தொல்லைகளைப் பட்டியலிடுகிறார். விசாரணை அதிகாரியோ, உனக்கு ராணுவத்தாலும் பிற குழுக்களாலும் பிரச்னை. உன்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் புலிகளால் உனக்கு உயிராபத்து ஏதும் இல்லை என்கிறார். ஏதோ ஒரு குறை வைத்துவிட்டதை உணர்ந்த பிரதீபனின் அடுத்த நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது. மனிதர்கள் வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய இயல்புடையவர்கள் என்பதை மிகவும் நுட்பமாகச் சொல்கிறது இந்தக் கதை. நூலின் தலைப்பான பெயரற்றது கதை. ஈழத்தில் உள்ள சாதி முரண்களைச் சரடாகவைத்துப் பின்னப்பட்டுள்ளது. இயக்கம், அமைப்பு, போராட்டம் எல்லாம் ஒரு கவர்ச்சியாக மக்களிடம் கவிந்திருந்தாலும் பொதுச்சமூகம், சாதி என்னும் சாபக்கேட்டை மீறாமல் இருப்பதை பெயரற்றது கதை உணர்த்துகிறது. நீடித்த யுத்தம், கடற்தொழிலைப் பாழாக்கி வறுமையைக் கொடுக்கும்போது, எப்படியாவது தன் மகனை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சிக்கும் சின்ராசு மாமா கதை. முடிவில் மூன்று விதமான அரசிய்ல கோட்பாடுகளை விமர்சிக்கிறது. இந்தத் தொகுப்பில் உள்ள எட்டுக் கதைகளில் 90 சுவிஸ் பிராங்குகள் எனும் கதைதான் ஈழத் தமிழர்களின் புகலிட வாழ்வின் யதார்த்த நிலையை தோலுரித்துக் காட்டுகிறது. அபிதேமி என்ற கறுப்பின ஆஃப்ரிக்க அகதி, ஈழத் தமிழ் அகதியிடம் தன் கதையைச் சொல்கிறாள். தாய் நிலம் பிரிந்த அந்தப் பெண்ணின் கதையை வலியோடு ஈழ அகதி கேட்டுக் கொண்டிருக்கும்போது உள்ளே நுழைகிற இன்னோர் ஈழத் தமிழரான றமணன், இப்படிச் சொல்வதோடு அந்தக் கதை முடிகிறது கள்ளக் கறுவல் நாய்களோடு உனக்கென்ன கதை வேண்டியிருக்கிறது. சயந்தனின் கதைகளில் வரும் மனிதர்கள் உத்தமர்கள் அல்ல. அவர்கள் சராசரிக்கும் கீழான எளிய மனிதர்கள், தேவையில்லாத இடத்தில்கூட பொய் பேசக்கூடியவர்கள். இத்தகைய இயல்புடையவர்களின் கதையை, கிண்டலுடன் கூடிய மொழியில் சொல்லும்போது, அது மேலும் வலுப்பெறுகிறது. இதை யுத்தத்தின் நினைவுகளைச் சுமக்கும் ஒருவனின் படைப்பாகக் கொள்ளலாம். நன்றி: விகடன்.

Leave a Reply

Your email address will not be published.