பேசாத பேச்செல்லாம்

பேசாத பேச்செல்லாம், ப்ரியா தம்பி, விகடன் வெளியீடு, சென்னை, விலை 170ரூ.

    To buy this Tamil book : https://www.nhm.in/shop/100-00-0002-459-6.html உனது எழுத்தை எனது மொழியில் நீயே எழுது – என்றார் கவிஞர் இன்குலாப். ஆண்கள், பெண் வேடமிட்டு எழுதிய எழுத்துகளில் கழிவிரக்கமும், உங்களுக்கு ஆதரவாக நான் என்ற வீண் ஜம்பமும்தான் வெளிப்பட்டது. இதையே பெரியார், பெண்களுக்காக ஆண் பாடுபடுவதாகச் சொல்வது எலிகளுக்காகப் பூனைகள் பாடுபடுவதாகச் சொல்வதைப்போல் என்றார். அடக்கப்பட்ட சமூகமே அவர்களது பிரச்னையை எழுத, பேச, போராடப் புறப்பட்டதுதான் இந்த நூற்றாண்டின் மிக முக்கிய எழுச்சி. அந்த வரிசையில் கவனிக்கத்தக்கது ப்ரியா. தம்பியின் பேசாத பேச்செல்லாம் ஆனந்த விகடனில் வாரந்தோறும் தமிழ்ச்சமூகத்தின் குடும்ப வாழ்க்கையை வறுத்தெடுத்த தொடர் இது. ‘மகள்கள் எந்தக் காலத்திலும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களிடம் உட்கார்ந்து பேசினால், வண்ணமயமான உலகம் இன்று அவர்களுக்குள் ஒளிந்திருப்பதைக் கண்டறிய முடியும். சதாநேரமும் தன்னைச் சுற்றி நடப்பதைக் கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். மனம் முழுவதும் கேள்விகளால் நிரம்பி வழிகிறார்கள். நாமும் அப்படித்தான் இருந்தோம்’ – தான் எப்படி இருந்தாரோ, எப்படி இருக்க நினைத்தாரோ, யாரைக் கவனித்தாரோ… அவை அனைத்தையும் அப்படியே வார்த்தைகளுக்குள் கொண்டு வந்துள்ளார். இந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது நமக்குத் தெரிந்த, தெரியாத யார் யார் முகங்கள் எல்லாமோ நினைவுக்கு வந்துபோகின்றன. ஆனால் அவை அனைத்தும் யதார்த்தமாய்ச் சுடுகிறது. எதை வீட்டுக்குள் பேசாதே என்று கட்டுப்படுத்தப்பட்டாரோ, அதைச் சமூகத்தின் முன்னால் பகிரங்கமாகப் பேசுகிறார். ‘பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்’ என்கிறான் பாரதி. அந்த வரிகளின் வழிப்பட்ட கட்டுரைகள் இவை. பெண்ணியம், பெண் விடுதலை, பெண் உரிமை என எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அது பெண்ணின் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படுவதுதான். வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாத இயம், விடுதலை, உரிமையைப் பற்றி இந்தக் கட்டுரைகள் பேசவில்லை. அதனால்தான் பெண்ணின் பிரச்னைகள் மட்டுமல்லாது, பெண்ணுக்குள் இருக்கும் பிரச்னையையும் பேச முடிகிறது. படிப்பும் பொருளாதாரமும் மட்டுமே பெண்ணை மேம்படுத்த போதுமானவை இல்லை. அதனால்தான் அனைத்துக் கட்டுரைகளும் குடும்ப அமைப்பை கேள்வி கேட்கின்றன. ‘குடும்பங்களில் தன் சொந்தக் கருத்தோடு பெண்கள் வாழ்வதற்கு, இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? ஏனென்றால் மார்க்ஸை நினைத்தபடி பூஜை அறை கழுவும் தோழர்கள்(!) பாவம் அல்லவா? பெண்களோடு சேர்ந்து ஆண்கள் படிக்க வேண்டிய புத்தகம்! – புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 19/4/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *