பொது அறிவுக்கு 1000 கேள்வி பதில்கள்
பொது அறிவுக்கு 1000 கேள்வி பதில்கள், டி.எஸ். ரோகிணி, நற்பவி பிரசுரம், 57பி, பசுல்லா சாலை, தி.நகர், சென்னை 17, பக். 368, விலை ரூ. 150.
எவ்வளவுதான் உயர் கல்வி கற்றிருந்தாலும், ஒருவரிடமுள்ள பொது அறிவுத் திறன்தான் அவரது ஆற்றலை உயர்த்தி காட்டுகிறது. அதனால் அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் பொது அறிவுத் தேர்வுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. தவிர, படிக்காதவர்களும் கூடத் தங்களது பொது அறிவை வளர்த்துக் கொள்வது சமுதாயத்தில் மதிப்பு பெற அவசியமாகிறது. இந்நூலின் அறிவியல், வரலாறு, ஆன்மிகம், பொதுச் செய்திகள் என்று 12 தலைப்புகளில் வினா விடைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைப்பிலும் தலா நூற்றுக்கணக்கான கேள்வி பதில்கள். இறுதியாக உள்ள பொதுச் செய்திகளுக்கு மட்டும் 1333. ஆக, மொத்தம் 3500க்கும் மேற்பட்ட கேள்வி பதில்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியர்கள் எந்த மனித இனத்தைச் சேர்ந்தவர்கள்? குடிப்பதில் முதலிடம் வகிக்கும் நாடு எது? மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய ஜனாதிபதி யார்? கழுதை ரேஸ் நடக்கும் ஒரே இந்திய மாநிலம் எது? அர்ஜுனனின் காண்டீபத்தை வடிவமைத்தவர் யார்? சத்தில்லாத உணவுப் பொருள் எது? இப்படி எளிமையாகவும் படிக்க ஆர்வத்தைத் தூண்டும்படியாகவும் பெரும்பாலான கேள்வி பதில்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் பயன் தரும் நூல். -பரக்கத். நன்றி: துக்ளக், 29/1/2014.
—-
சிதம்பரம் நடராசர் திருக்கோயில் அமைப்பும் சிறப்பும், முனைவர் அ. ஜம்புலிங்கம், இந்துமதி பதிப்பகம், 3, லால்பேட்டை தெரு, சிதம்பரம் 1, விலை 120ரூ.
ஒரு தலத்தின் பெருமை, கோயில் சிறப்பு, மூர்த்தி, தீர்த்தம், அற்புதம், முக்தி பெற்ற பெரியோர் ஆகியவற்றால் சிறப்பு எய்தும் இவை அனைத்தும் பெற்றுத் திகழ்வது சிதம்பரம் திருக்கோயில் ஆகும். இக் கோயிலையும், சைவ சமயத்தையும் பிரிக்க முடியாத வகையில் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடன் தொடர்பு கொண்டு விளங்கியுள்ளதனை இந்நூல் வழி அறியலாம். திருக்கோயிலின் தோற்றம், வளர்ச்சி நிலைகள், திருக்கோயில் அமைப்பு, ஐந்து சபைகள், மூர்த்தி, தீர்த்தம், தலம், அடியார்கள், சமய நூல்களுள் வழிபாட்டு முறைகள், தனிக் கோயில்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்வதற்குரிய பல அரிய செய்திகளை விளக்கமாக தொகுத்தளித்திருக்கிறார் முனைவர் அ. ஜம்புலிங்கம். நன்றி: தினத்தந்தி.