போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி
போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி?, ஸ்ரீநிவாஸ் பிரபு, விகடன் பிரசுரம், சென்னை, விலை 125ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-861-3.html அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அனைத்து வேலை வாய்ப்புகளுக்கும், போட்டித் தேர்வு முறையே பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களே உரிய பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதால் போட்டியாளர்கள் இத்தேர்வு குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து கொள்வது முக்கியம். இந்நூலாசிரியர் பல்வேறு இதழ்களில் கதை, கட்டுரைகளை எழுதும் எழுத்தாற்றல் உள்ளவர் என்பதால், இத்தேர்வு குறித்த பல விவரங்களை இந்நூலில் எளிமையாக விளக்கியுள்ளார். போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்குக்கான விடைகள் என்று கேள்வி பதில் தொகுப்பாக இந்நூல் இல்லை. மாறாக, போட்டித் தேர்வு என்றால் என்ன? அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? இத்தேர்வு முறைகள் எப்படி இருக்கும்? இத்தேர்வில் எத்தனை வகையான பிரிவுகளில் கேள்விகள் தயாரிக்கப்படுகின்றன? ஒவ்வொரு வகையையும் எப்படி அணுகினால் சரியான விடையைக் கண்டறிய முடியும்? தேர்வுக்குச் செல்லும்முன் நம் மனநிலையை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும்? எந்த இடத்தில் என்ன தவறு நடக்கும்? அதை சரி செய்வது எப்படி? தேர்வில் எப்படி நேரத்தை கையாள வேண்டும் என்று பலவற்றுக்கும் உரிய எடுத்துக்காட்டுகளுடன் எளிய பயிற்சிகளை உடைய நூலாக ஆக்கியுள்ளார். போட்டித் தேர்வுகளுக்கான நுணுக்கங்களை கூறும் இந்நூல், இளைஞர்களின் கையில் இருப்பது நல்லது. -பரக்கத். நன்றி: துக்ளக், 7/5/2014.
—-
தியாக சீலர் கக்கன், மதுரா டிராவல் சர்வீஸ், சென்னை, விலை 100ரூ.
காமராஜர் அமைச்சரவையில், அமைச்சராகப் பணியாற்றியவர் கக்கன். நேர்மையானவர், ஊழலுக்கு இடம் கொடுக்காதவர் என்றெல்லாம் பெயரெடுத்த தூய்மையாளர். ஒரு அரசியல்வாதி எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். கக்கனைப் பற்றிய விவரங்கள் அதிகமாகத் தெரியாத நிலையில், மிகச் சிரமப்பட்டு பல்வேறு இடங்களுக்குச் சென்று, ஆதாரப்பூர்வமான தகவல்களைத் திரட்டி இந்த நூலை எழுதியுள்ளார் முனைவர் இளசை சுந்தரம். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. குறிப்பாக, அரசியல்வாதிகள் இந்நூலைப் படிப்பதுடன், கக்கனின் வாழ்க்கையைப் பின்பற்றி நடந்தால், அரசியல் தூய்மை பெறும். நன்றி:தினத்தந்தி, 7/5/2014.