மகளிர் மகிமை
மகளிர் மகிமை, பி. முஹம்மது சல்தான் ஃபாஜில் தேவ்பந்தி, பி.எம். கலிலூர் ரஹ்மான் மன்பஈ, அமானத் அறக்கட்டளை, சென்னை, பக். 384, விலை 140ரூ.
ஆண் பெண் இரு பாலரும் ஒன்றாகப் பேசுவதிலும், பழகுவதிலும் எப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். இரு பாலருக்கும் உள்ள ஒழுக்க முறைகள் என்ன – என்பன போன்ற விஷயங்கள் எல்லா சமயங்களிலும் வரையறுக்கப்பட்டுள்ளன. முன்பு இவை முறையாக போதிக்கப்பட்ட கடைபிடிக்கப்பட்டால், பாலியல் குற்றங்கள் என்பது நாட்டில் மிக மிகக் குறைவானதாகவே இருந்தன. இன்றோ இக்குற்றங்கள் பல்கி பெருகி சர்வசாதாரண விஷயமாக மாறிவிட்டன. இதில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. இவற்றுக்கான காரணங்கள், இக்குற்றங்கள் நிகழாமல் இருக்க வழிகள், பெற்றோர், பெரியோர், கணவன்-மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்குமான உரிமைகள், கடமைகள், மாண்புகள். குறிப்பாக ஒரு பெண் சிறுமியாக, இளம் பெண்ணாக, மனைவியாக, தாயாக, மாமியாராக எப்படிப் பரிணாமப் படிகளில் பயணிக்க வேண்டும். இறைத் தூதர்களின் வரலாறுகளில் இவை குறித்து காணப்படும் படிப்பினைகள் என்று பல விஷயங்கள் குறித்து இந்நூலில், இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை திருக்குர் ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. 19 தலைப்புகளில் சுமார் 384 பக்கங்களில், மிக எளிய நடையில், ஆங்காங்கே நடப்பு செய்திகளையும் உதாரணங்களாகக் காட்டி விளக்கப்பட்டுள்ளன. இஸ்லாமியர்கள் குறிப்பாக பெண்கள் ஒவ்வொருவரும் படித்துணர வேண்டிய நூல்களில் இது குறிப்பிடத்தக்க நூல். -பரக்கத். நன்றி: துக்ளக், 11/2/2015.