மனக்குகைச் சித்திரங்கள்
மனக்குகைச் சித்திரங்கள், ஆத்மார்த்தி, புதிய தலைமுறை பதிப்பகம், பக். 104, விலை 120ரூ.
தன் வாழ்க்கையில் சந்தித்த பல மனிதர்களை குணச்சித்திர வார்ப்புகளாக தீட்டிக் காட்டுகிறார் ஆத்மார்த்தி. புதிய தலைமுறை வார இதழில் வெளியான, கட்டுரைகளின் தொகுப்பு. பழைய புத்தக கடைக்காரர், சாலையில் சாக்பீஸ் மூலம் சித்திரம் வரையும் ஓவியர், தன் உற்றார் உறவினரை போரில் பறிகொடுத்த சிலோன்காரர், சாலை விபத்தில் மகனை பறிகொடுத்த தந்தை, என பல வகையான மனிதர்கள். ராணுவத்தில் சேர இருந்த மகன், சாலை விபத்தில் போனதும், தந்தை சொல்கிறார், நாட்டுக்கு கொடுத்திருந்தால்கூட ஆறியிருக்கும். ரோட்டுக்கு கொடுத்ததுதான் ஆறவேயில்லை என. இப்படி ரத்தமும் சதையுமாக பல சம்பவங்களை பதிவு செய்து மனதை உருக்குகிறார். மிக எளிமையான மனிதர்கள் குறித்த நூலாசிரியரின் பதிவுகள், நறுக்கு தெறித்தாற்போல், இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் எழுதப்பட்டிருப்பது, வாசிப்பை எளிதாக்குகிறது. மறக்க முடியாத மனிதர்களை கொண்ட உரைநடைக் காவியம். -எஸ். குரு. நன்றி: தினமலர், 20/7/2014.
—-
எட்டும் தூரத்தில் ஐ.ஏ.எஸ்., க. விஜய கார்த்திகேயன், விகடன் பிரசுரம், பக். 130, விலை 85ரூ.
ஐ.ஏ.எஸ். ஆவது எப்படி என்று ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்திருந்தாலும், இந்த புத்தகம் வித்தியாசமானது. 2011ம் ஆண்டில் வென்று, தற்போது கோவில்பட்டி சப் கலெக்டராக திறம்பட பணிபுரியும் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய கார்த்திகேயன், இந்த நூலை எழுதிஇருக்கிறார். நான் அதிகாரியாக எழுதவில்லை. உங்களுக்கு முன்பு இத்தேர்வில் வெற்றி பெற்ற சக மாணவனாகவும், ஒரு நண்பனாகவும் எழுதி உள்ளேன் என்று முன்னுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றி எழும் சந்தேகங்கள், கேள்வி பதில் பாணியில் தரப்பட்டுள்ளது. எளிய தன்னம்பிக்கை கருத்துகளையும், புத்தகம் முழுக்க ஆங்காங்கே தூவி இருக்கிறார். தேர்வில் எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள், படிக்க வேண்டிய பாடங்கள், எளிய உத்திகள் என, அருமையான அனுபவ வழிகாட்டி இப்புத்தகம். -ஜி.வி.ஆர். நன்றி: தினமலர், 20/7/2014.