மனித உரிமைகள் வினாக்களும் விடைகளும்

தமிழிசை வரலாறு, நா. மம்மது, நாதன் பதிப்பகம், 72-43, காவேரி தெரு, சாலிகிராமம், சென்னை – 600009.

மறுக்கப்பட்ட தமிழிசைக்கும் மறக்கப்பட்ட தமிழிசைக் கருவிகளுக்கும் ஒரு கையடக்க என்சைக்ளோபீடியாவாக உருவாகியிருக்கிறது இந்த நூல். தமிழ் இசைப் பண்கள், தமிழ் இசைக்கருவிகள், தமிழிசை வளர்த்த பெரியோர் என மூன்று பகுதிகளாக இந்தப் புத்தகத்தைப் படைத்திருக்கிறார் நா. மம்மது. கர்நாடக ராகம் என்ற பெயரில் கேட்டுப் பழகிய ஹரிகாம்போதி, சங்கராபரணம், கரகரப்பிரியா போன்றவை செம்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை என்ற ஆதிகால தமிழ்ப் பண்களே என்பதைப் படிக்கும் ஒவ்வொரு தமிழ் வாசகனும் பெருமிதம் கொள்வது உறுதி. ஆழமான ஆராய்ச்சி இந்நூலில் வெளிப்பட்டாலும் ஒவ்வொரு தமிழ்ப்பண்ணிலும் தயாரான கீர்த்தனை, சினிமா பாடல் என எடுத்துக்காட்டியிருப்பது ஜனரஞ்சகம்.

மனித உரிமைகள் வினாக்களும் விடைகளும், லீ. லெவின், தமிழாக்கம் – மா. சேது ராமலிங்கம், நேஷனல் புக் டிரஸ்ட், நேரு பவன், 5 இன்ஸ்டிடியூஷன்ல் ஏரியா, பேஸ் 2, வஸந்த் குஞ்ச், புது தில்லி – 110070.  

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியா, மனித உரிமை மீறல்களிலும் உலகில் கொடிகட்டிப் பறக்கிறது. குடும்ப வன்முறையில் தொடங்கி, அரசாங்கம் வன்முறை வரை, மனிதர்களின் கௌரவமும் அடிப்படை உரிமைகளும் மீறப்படாத இடமே இல்லை எனலாம். ஜனநாயக முகமூடி அணிந்த ஒரு வன்முறையான சமூகத்தின் ஆபத்துகள் சாதாரணமானவையல்ல. பல சமயங்களில் தாங்கள் மீறப்படமுடியாத சில அடிப்படை உரிமைகளைக் கொண்டிருக்கிறோம் என்பதையே பெரும்பாலான மனிதர்கள் அறிவதில்லை. இந்த அறியாமையே பெரும்பாலான மனித உரிமை மீறல்களுக்கு அனுமதிச் சீட்டாக இருக்கிறது. இந்த நூல் அடிப்படை மனித உரிமைகள் பற்றி, கேள்வி பதில் வடிவில் ஒரு மிகச் சிறந்த அறிமுகத்தை வழங்குகிறது. சர்வதேச சாசனங்கள் வழங்கும் பல்வேறு அடிப்படை மனித உரிமைகள் பற்றி கச்சிதமாக விளக்குகிறது.
இன்று மனித உரிமை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சிலரை உடனடியாகத் தண்டிக்கவேண்டும், காவல்துறைக்கு அத்தனை கட்டற்ற அதிகாரம் வேண்டும் என்ற ஆபத்தான கருத்தியல் பரப்பப்படும் சூழலில், இதுபோன்ற நூல்களின் பயன்பாடு மிகவும் முக்கியமானது.
நன்றி: குங்குமம் 08/10/12      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *