மருத நிலமும் பட்டாம் பூச்சிகளும்
மருத நிலமும் பட்டாம் பூச்சிகளும், சோலை சுந்தரபெருமாள், முற்றம், சென்னை 14, பக். 296, விலை 150ரூ.
நூலாசிரியரின் கருத்தரங்க உரைகள், இதழ்களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல். வண்டல் நிலப் பகுதியின் குறிப்பாக தஞ்சை மாவட்ட மக்களின் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள். தஞ்சை மண்ணின் சாதியப் பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், வழிபாடு ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அம்மண்ணில் வளம்பெற்றிருந்த நிலவுடைமைச் சமூக அமைப்பே இருந்தது என்பதைச் சொல்லும் நூல். தஞ்சை மாவட்ட எழுத்தாளர்களின் சிறப்பான இலக்கியங்களைப் பற்றிய அறிமுகமும், விமர்சனங்களும் உள்ள கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன. நூலாசிரியர் எழுதிய புத்தக விமர்சனக் கட்டுரைகளும் உள்ளன. இது தவிர கேரளம், தமிழகம், தண்ணீர் பகிர்வுக்கான பரிந்துரைத் திட்டம், வல்லிக்கண்ணன் ஒரு வரலாறு, கவிதைத் தொகுப்பில் கலைஞர் பெயர் விடப்பட்டுள்ளதா, கல்விக் கூடங்களில் அழியும் குழந்தைமை என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல கட்டுரைகளைத் தொகுத்திருப்பது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.
—-
கோடம்பாக்கத்தில் அறுபது ஆண்டுகள், ஆரூர்தாஸ், மணிவாசகர் பதிப்பகம், சென்னை 1, பக். 264, விலை 125ரூ.
ஐந்நூறு நேரடி தமிழ்ப் படங்களுக்கும் ஐந்நூறு மொழி மாற்றுப் படங்களுக்குமாக சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய சாதனையாளர் திரைப்பட கதை வசனகர்த்தா ஆரூர்தாஸ். அக்காலத்தில் நடிப்புத்துறையில் போட்டியாளர்களாகக் கருதப்பட்ட எம்.ஜி.ஆர். சிவாஜிகணேசன் இவருடைய படங்களுக்கும் ஒரே சமயத்தில் வசனம் எழுதிய பெருமைக்குரியவர். தனது திரையுலக அனுபவங்களை ஆரூர்தாஸ் இந்த நூலில் விவரித்திருந்தாலும் ஆங்காங்கே சென்னை நகரின் வரலாற்றையும் தொட்டுச் செல்வது ரசிக்கும்படி இருக்கிறது. தாமஸ் ஆல்வா எடிசன், தான் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை சினிமா என்று அழைத்ததையும் பின்னர் தமிழ் நாட்டில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு, முதல் சினிமா ஸ்டுடியோ என்று ஏராளமான சுவையான பல தகவல்கள் நூல் முழுக்க விரவிக்கிடக்கின்றன. வெற்றிப்படத் தயாரிப்பாளர்கள் என்று அறியப்பட்ட ஏவி. மெய்யப்ப செட்டியார், எஸ். எஸ். வாசன், நாகிரெட்டி, மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் போன்றறோரே பொறாமைப்படும் அளவுக்கு சாதனை புரிந்த வெற்றிப் படங்களைத் தயாரித்த சம்பந்திகளாக இருந்த மதுரையைச் சேர்ந்த இரு தயாரிப்பாளர்களைப் பற்றிய கட்டுரை மிகுந்த வியப்பைத் தருகிறது. அருணாசலம் ஸ்டுடியோ, பிரசாத் ஸ்டுடியோ போன்றவை உருவான வரலாற்றை ஆரூர்தாஸ் தன் சொந்த அனுபவங்களுடன் இணைத்து எழுதியிருப்பது ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. அக்கால ஸ்டுடியோக்களைப் பற்றிய குறிப்புகள் இன்றைய தலைமுறையினரை வியப்பில் ஆழ்த்தும். திரைத் துறையில் இருந்தாலும் ஒழுக்கமாக இருந்ததே தனது வெற்றிக்கு முக்கிய காரணம் என ஆரூர்தாஸ் குறிப்பிடுவது கவனத்தில் கொள்ளத்தக்கது. திரைப்பட ரசிகர்கள், திரையுலகப் பிரமுகர்கள் என அனைவரும் அவசியம் படித்துப் பயன் பெற வேண்டிய அற்புத நூல். நன்றி: தினமணி, 17/9/12.