மறுபிறப்பு பற்றிய ஆச்சர்யமான தகவல்கள்
மறுபிறப்பு பற்றிய ஆச்சர்யமான தகவல்கள், எஸ்.குருபாதம், மணிமேகலை பிரசுரம், பக். 372, விலை 250ரூ.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் மெய்யியல் துறையில் ஆசிரியராக இருக்கும் குருபாதம் எழுதியுள்ள, இந்த நூலின் உள்ளடக்கம். பிறப்புக்குப் பின் பிறப்பு-இறப்பு குறித்து அலசுகிறது. ஆசிரியர் இந்த சர்ச்சைக்குரிய மிக சிக்கலான, நுட்பமான விஷயத்தை ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன், மிகுந்த பொறுப்புடன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு எழுதியிருக்கிறார். இவருடைய கருத்துக்களுடன் உடன்படுகிறோமோ இல்லையோ, நூலாசிரியரின் நேர்மையான அணுகுமுறைக்கு மதிப்பளிக்க வேண்டும். தமிழில் இது மாதிரியான, வித்தியாசமான புத்தகங்கள் வந்திருப்பதாகத் தெரியவில்லை. -ஜனகன். நன்றி: தினமலர், 1/6/2014.
—-
மணிமேகலை, அரும்பதவுரை-டாக்டர் உ.வே. சாமிநாதையர், வெளியீடு-டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம், சென்னை, பக். 776, விலை 320ரூ.
தமிழ்த்தாயின், ஐம்பெருங்காப்பியங்களில், இரட்டைக் காப்பியங்கள் என்று பெருமையாகக் கூறுவது சிலப்பதிகாரம், மணிமேகலை எனும் இரு நூவ்லகள் ஆகும். இவை இரண்டும் காப்பியப் பண்புகளைச் சிறப்பாகப் பெற்றிருக்கின்றன என்பர். இந்நூலைத் தேடி பல ஊர்களுக்குச் சென்று, 10 கையெழுத்துப் பிரதிகளைத் திரட்டி, ஒப்பிட்டு அவற்றுள் குறைந்தும், பிறழ்ந்தும், திரிந்தும் இருந்த பாகங்களை எல்லாம் ஒழுங்கு படச் செய்தளித்த டாக்டர் உ.வே.சா.வுக்கு தமிழ் மக்கள் என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்கள் ஆவர். இந்நூல் மாதவியின் மகள், மணிமேகலையின் வரலாறு கூறுவதாக இருப்பினும், நூலின்கண் பல நீதிகள், புத்த சரித்திரம், பவுத்த தருமம் முதலியனவும் இருப்பதால் நூலின் மேன்மை தெரிகிறது. மணிமேகலையின் கதைச் சுருக்கம் முதலிலும் பாடல்களுக்கு அரும்பதவுரை பின்னும் கொண்டதாக இருப்பதால், நூலை எளிதாக கற்க இயலும். இந்நூலில் வந்துள்ள வேறு கதைகள், புத்தரின் பல பெயர்கள், அரும்பத அகராதி முதலியனவும் பிற்சேர்க்கையில் இருப்பது மிகவும் பயனுள்ளதாகும். ஒன்பதாம் பதிப்பாக இந்நூல் வெளிவர, நிதி உதவிய தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கல்லூரி, பள்ளி, பொது நூலகங்களிலும், தமிழ் ஆர்வலர்கள் இல்லங்களிலும் இருக்க வேண்டிய ஒப்பற்ற நூல். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 1/6/2014.