மறைக்காட்டில் ஒரு மாணிக்கம்

மறைக்காட்டில் ஒரு மாணிக்கம், பகீரதன், கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம், வேதாரண்யம், பக். 261, விலை 250ரூ.

சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் வாழ்வை விவரிக்கும் நூல். சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகளின் அடியொற்றி நடந்த வேதரத்தினம் பிள்ளை, பின்னர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் செயல்பட்டார். அவருடன் பழகியவர்களின் அனுபவத்தையும் இந்நூல் பதிவு செய்துள்ளது. சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போது நோய்வாய்ப்பட்ட நிலையிலும் பேரவைக் கூட்டங்களில் அவர் தவறாமல் பங்கெடுத்ததை பொள்ளாச்சி நா. மகாலிங்கம் குறிப்பிடுகிறார். அகில இந்திய அளவில் சர்தார் எனும் பட்டம் பட்டேலுக்குப் பிறகு வேதரத்தினம் பிள்ளைக்கே வழங்கப்பட்டுள்ளது. ராஜாஜியின் வேதாரண்ய உப்புச்சத்தியாக்கிரகத்தை வெற்றிகரமாக்கியதற்காக வேதரத்தினம் பிள்ளைக்கு அப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது என்பதை சி. சுப்பிரமணியம் போன்றோர் மூலம் பதிவு செய்திருப்பது நூலின் சிறப்பம்சம். சர்தார் வேதரத்தினம் பிள்ளை வேலூர் சிறையில் இருந்தபோது, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையிலடைக்கப்பட்டவர்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதையும், அதை முறியடித்து கைதிகள் வேலை செய்வதிலிருந்து விடுவிக்கப்பட சர்தார் கூறிய ஆலோசனைகளும் படிப்போரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. இவை போன்ற பல சம்பவங்கள் நூலெங்கும் விரவியிருப்பதைக் காணமுடிகிறது. சிறந்த நூல். நன்றி: தினமணி, 28/9/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *