மாங்குடி மருதனாரின் மதுரைக் காஞ்சி
மாங்குடி மருதனாரின் மதுரைக் காஞ்சி, விளக்க வடிவு சாமுவேல் சுதானந்தா, கயல்கவின் புக்ஸ், 28/ப.எண். 20, டாக்டர் அம்பேத்கர் சாலை, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 200ரூ.
மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் மதுரைக் காஞ்சியில் உள்ள மதுரை நகரம் தொடர்பான காட்சிகளைப் பார்க்கம்போது, அன்றைய மதுரைக்கும், இன்றைய மதுரைக்கும் உயிர்ப்புள்ள ஒரு தொடர்ச்சி இருப்பதைப் பார்க்கமுடிகிறது. மதுரை, அன்றும் மெதுவாகவே உறங்கச் சென்றதென்பதை உணர்த்தும் காட்சிகள் இவை. இரவில் பழைய மதுரையும், புதிய மதுரையும் நெருங்கிப் பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற தோற்றம் மதுரைக் காஞ்சியில் கிடைக்கிறது. வெறுமனே வரலாற்றுக்குட்பட்ட மதுரை எனச் சில பல செய்திகளாக வறண்டுபோகாது. கவிதைக்கே இயல்பான உயிர்த்துடிப்பால் படிப்பவரோடு ஊடாடும் ஒன்று என்று கூறுகிறார். மதுரைக் காஞ்சிக்கு விளக்க வடிவம் கொடுத்திருக்கும் சாமுவேல் சுதானந்தா. செவ்வழிப் பண்ணோடு யாழும் முழவும் இசைக்க ஒளி பொருந்திய விளக்குகள் முன்செல்ல முதல் கருவுற்ற பெண்கள் மயில்போல மெல்ல நடந்து கைதொழுது தெய்வத்துக்குப் படைக்கும் படைப்போடு சாலினி எனப்பெயர் கொண்ட தேவராட்டிளை (தெய்வம் ஏறி ஆடும் பெண்) அணுகினர். மன்றந்தோறும் நடந்தது குரவை ஆட்டம். திருவிழா போன்ற ஆரவாரம் நிரம்பிய முதல் சாமம் சென்றது. இரண்டாம் சாமம் வந்தது. ஒலி அடங்கவும் கதவை அடைத்து மகளிர் பள்ளியறையில் தூங்க, அடை, விசயம், மோதகம் என்ற பண்டங்களைக் கூவி விற்றவர்கள் உறங்க, விழாவில் ஆடும் ஆட்டக்காரர்கள் ஓய்ந்துபோக, இரைச்சல் அடங்கிய கடல் போல் படுத்தோர் அனைவரும் இனிதே கண் மூடி அயர இரண்டாம் சாமம் முடிந்தது. மூன்றாம் சாமத்தில் பேயும், அணங்கும் உருவம் எடுத்துக் கழுது என்ற பேயோடு திரிந்தன. கண்ணை மறைத்துத் திரியும் திருடரைப் பதுங்கியிருந்து பிடிக்கும் ஊர்க்காவலர் மழை பொழீந்தாலும் தெருக்களில் நல்ல காவல் வழங்கினதால் மூன்றாம் சாமம் அச்சமில்லாது பாதுகாப்போடு கழிந்தது. வைகறை வந்தது. அந்தணர் வேதம் பாட, யாழ் மீட்டுவோர் மருதப்பண் இசைக்கக் களிறும் புரவியும் உண்ணப் பண்ணியக் கடைகளை மெழுக, கள் விற்போர் கடை திறக்க, ஒலி எழுப்பும் அணிகலன் அணிந்த மகளிர் கதவு திறக்கும் ஓசையிட, இரவில் கள் குடித்தோர் தளர்ந்த குரலில் பேச, வாழ்த்துவோர் வாழ்த்த, முரசு ஒலிக்க, சேவல் கூவ, அன்னம் கரைய, மயில் அகவ, களிறு முழங்க, புலி உறும இரவு பெயர்ந்து பொழுது விடிந்தது. நன்றி: தி இந்து,