மாணவர்களுக்காக மகாத்மா
மாணவர்களுக்காக மகாத்மா, எம்.எல்.ராஜேஷ், ஸ்ரீராம் பப்ளிகேஷன்ஸ், திருவள்ளூர் மாவட்டம், பக். 42.
மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாகப் படிக்கும் வாய்ப்பு பலருக்கு வாய்ப்பதில்லை. அதனால் அவரது வரலாற்றைச் சுருக்கி, சித்திரக் கதைகளாகத் தந்துள்ளார் நூலாசிரியர். குழந்தைகள் உட்பட அனைவரின் மனதிலும் எளிமையாக பதியும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி இது. நூலைப் படித்து முடித்ததும் காந்தியடிகளின் வாழ்க்கை வெறும் வரலாறு அல்ல. அது அனைவரும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கைமுறை என்பதை உணரவைத்துள்ளார் நூலாசிரியர். காந்தியின் அன்பு, அகிம்சை, சகோதரத்துவம், அவர் மக்களுக்காக போராடிய சரித்திர நிகழ்வுகள், அவரது தூய்மை, எளிமை என்று எதையும் விடாமல் சித்திரங்கள் வழி பதிவு செய்துள்ளார். காந்தியின் பெருமையை, புகழை இளந்தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நல்முயற்சி இது. நன்றி; குமுதம், 20/12/2014.
—-
யோக இரகசியங்கள், டி.கே.சந்திரசேகர் ஐயர், மேகதூதன் பதிப்பகம், சென்னை, பக். 128, விலை 65ரூ.
பசி, தாகம், தூக்கம், சோம்பல், மரணம் ஆகியவற்றை வெல்ல உதவும் வழிமுறைகளைக் கூறும் நூல். உண்ணும் உணவு முறைகளில் சேர்க்க வேண்டிய சுவைகளைச் சேர்த்து விலக்க வேண்டியவைகளை விலக்கி, தானம், தர்மம் செய்து நேர்மையான வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலே பசி, தாகம், தூக்கம் உள்ளிட்டவற்றை வெல்ல முடியும் என்கிறார் நூலாசிரியர். எளிமையான யோகா பயிற்சி, தியானம், உணவு முறை ஆகியவற்றால் எதையும் வெல்ல முடியும் என்பதை உணர்த்தும் நூல். நன்றி; குமுதம், 20/12/2014.