மானுடத்தின் தேடல்கள்
மானுடத்தின் தேடல்கள், ஜே. கிருஷ்ணமூர்த்தி, தமிழில் எ. ராஜேஸ்வரி, நர்மதா பதிப்பகம், சென்னை 17, பக்கங்கள் 224, விலை 120ரூ.
வெளிநாடுகளில் நடந்த கூட்டங்களில் கேட்ட கேள்விகளுக்கு ஜே. கிருஷ்ணமூர்த்தி அளித்த பதில்களின் தொகுப்பு இந்நூல். மனிதனின் மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஜே.கே. அளித்த விளக்கங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மனிதன் தன்னை எப்படிப் புரிந்து கொள்வது? கோபம், பயம், போன்ற உணர்வுகளை எவ்விதம் கையாள்வது? உண்மையான தியாகம் என்றால் என்ன? என்பன போன்ற விஷயங்களைத் தெளிவாகப் பேசும் நூல். உண்ண, உடுக்க, பயணிக்க சுதந்திரம் என்பது போன்ற உடல்ரீதியான அடிப்படைச் சுதந்திரம் மட்டும் போதாது. முதலில் மனோ ரீதியான சுதந்திரம் தேவை. சமூக, கலாசார, மத, பொருளாதார மற்றும் பௌதிக தொடர்பால் மனதில் உருவாகியுள்ள கட்டுண்ட நிலையை ஒருவர் புரிந்து கொள்ளும்போது மட்டுமே மனோரீதியான உள்முகச் சுதந்திரம் கிட்டும் என்று தனிமனிதனை மையமாக வைத்த சிந்தனைகளின் வீச்சலாக மலர்ந்திருக்கும் நூல்.
—-‘
வனாந்திரத் தனிப்பயணி பக்தி- வாசிப்பு – நேர்காணல், இளம்பிறை, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக்கங்கள் 144, விலை 100ரூ.
பெண்ணியச் சிந்தனை இழையோடும் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், நேர்காணல்கள் ஆகியவற்றின் தொகுப்பு. பெண்கள் பொருளாதார ரீதியாக விடுதலை பெற்றாலும் உணர்வுரீதியாக யாரையும் சாராமல் இருக்க வேண்டும். கிராமத்தில் பெண்களுடைய நிலை மிகவும் கொடுமையானது. கிராமத்துப் பெண்கள் கடினமான வேலை செய்கிறார்கள். வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்க முடியாது. வீட்டிலும் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே சில பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதற்காக, அதை வைத்து அனைத்து பெண்களும் சுதந்திரமாக வசிக்கிறார்கள் என்று கருதுவது தவறு. இங்கு பெண்களுக்கு என்று எந்தக் கருத்துச் சுதந்திரமும் இல்லை. ஆண்களின் கருத்தை அப்படியே பின்பற்றுகிறார்கள். இதிலிருந்து மாறுபட்டு பெண் எழுத்தாளர்கள் தன் நிலையை தனக்கான பிரச்னைகளைத் தொடர்ந்து எழுதுவது பெண்கள் சமூகப் பிரச்னைகளோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வதன் அறிகுறி- சமூகத்தில் யார் அதிகம் துன்பம் அனுபவிக்கிறார்களோ, யார் மேலே வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அவர்களைச் சார்ந்துதான் நம் எழுத்து இருக்க வேண்டும். இவை போன்ற துணிச்சலும் நேர்மையும் உள்ள சிந்தனைகளை நூல் முழுவதும் காண முடிகிறது. சிறந்த நூல். நன்றி: தினமணி, 28 ஜனவரி 2013.