மாவீரன் தீரன் சின்னமலை
மாவீரன் தீரன் சின்னமலை, உடுமலை பி.எஸ்.கே. செல்வராஜ், தன்னம்பிக்கை வெளியீடு, 10, சாஸ்திரி வீதி எண் 1, பி.என்.புதூர், கோவை – 41. விலை ரூ. 100
‘சென்னி மலைக்கும் சிவன் மலைக்கும் இடையே ஆண்ட தீரன் சின்னமலை’ என்று அம்பிகாபதிப் புலவரால் பாடப்பட்ட மன்னனின் கதை இது! மறைந்திருந்து தாக்கும் கெரில்லா போர் முறையை தன்னுடைய காலத்திலேயே செயல்படுத்திக் காட்டிய மாவீரன் சின்னமலை, ஓடிக்கொண்டு இருக்கும் குதிரையின் முழங்காலில் குறி தவறாமல் சுடுவதில் வல்லவன். ஹைதர் அலி இறப்புக்குப் பிறகு, மைசூர் மன்னராகப் பொறுப்பேற்ற திப்பு சுல்தானுக்குக் கிடைத்த நம்பிக்கை மனிதர். ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகில் உள்ள ஓடாநிலையில் அவர் கட்டிய கோட்டை, 143 பீரங்கிகளை வைத்து, பிரிட்டிஷ் படைகள் இடிக்க வேண்டிய அளவுக்குப் பலமானது. அந்தக் கோட்டையில்தான் வெடிமருந்து, துப்பாக்கிகளை சின்னமலையே தயாரித்தார். கடைசிக் கட்டத்தில் பீரங்கிகளும் தயாரித்தார். இந்திய விடுதலைக்குச் சில ஆண்டுகளுக்கு முன், அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டபோது கண்டெடுக்கப்பட்ட பல்வேறு உதிரி பாகங்கள், சின்னமலை எத்தகைய வீர மலையாக வலம் வந்துள்ளார் என்பதை உலகுக்கு உரக்கச் சொன்னது. 1756 முதல் 1805 வரை அரை நூற்றாண்டு காலம் மட்டுமே வாழ்ந்தாலும், இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்தும் தனது வீரத்தால் நினைவுகூரப்படும் சின்னமலையின் சாகசங்கள் அனைத்தையும் உடுமலை செல்வராஜ் நம்முடைய மனக்கண் முன்னால் நேரடிக் காட்சிகளாக வர்ணிக்கிறார். மாவீரர்கள் அனைவருமே போரில் அல்லாமல், துரோகத்தால்தான் வீழ்த்தப்பட்டுள்ளனர். அதற்கு சின்னமலையும் விதிவிலக்கு அல்ல. கொங்கு நாட்டிலும் மைசூரிலும் மூன்று முறை பிரிட்டிஷ் படைகள் இவரோடு மோதித் தோற்றன. அதனால், நேரடியாக மோதுவது சாத்தியம் இல்லை என்று நினைத்தனர். பழனிமலைத் தொடரில் கருமலைப் பகுதி வனத்தில் சின்னமலை தலைமறைவாக இருப்பது அவரது சமையல்காரர் நல்லப்பனுக்கு மட்டும்தான் தெரியும். விலைக்கு வாங்கப்பட்டான் நல்லப்பன். அவரது குடிசைக்கு வந்து சாப்பிட்டுவிட்டு தலைமறைவாகி விடுவார் சின்னமலை. பணத்துக்கு ஆசைப்பட்டு அவரது குடிசைக்குக் கீழே சுரங்கம் தோண்ட அனுமதித்தார் நல்லப்பன். ஒருநாள் சாப்பிட வந்த சின்னமலையிடம், ‘தோளில் ஏன் துப்பாக்கியை வைத்துக்கொண்டே சாப்பிடுகிறீர்கள் – வெளியில் வைத்து விடுங்கள்’ என்று சாமர்த்தியமாகச் சொல்கிறார். சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது சுரங்கத்துக்குள் இருந்து பிரிட்டிஷ் படை வீரர்கள் வந்து, சின்னமலையைப் பிடித்துவிடுகிறார்கள். சங்ககிரிக் கோட்டையில் வைத்து தூக்கிலிடப்படுகிறார். பிரிட்டிஷ் படையில் இருந்துகொண்டே சின்னமலைக்குத் தகவல் அனுப்பும் காரியத்தை தொடர்ந்து செய்த வீரன் வேலப்பன். ஓடாநிலை அரண்மனையைத் தகர்க்கத் திட்டமிட்டு உள்ளனர் என்ற தகவல் அனுப்பியதும் இவர்தான். இதைப் பார்த்துத்தான் சின்னமலை தலைமறைவாகிறார். ஓடாநிலை அரண்மனையை பிரிட்டிஷ் படை கைப்பற்றியதும் இந்தக் கடிதத்தைக் கண்டுபிடித்தது. அடுப்பில் போட்டு இந்தக் கடிதத்தை எரித்திருக்கிறார் சின்னமலை. ஆனால், அதில் எரியாத ஒரு துண்டு காட்டிக்கொடுத்து விடுகிறது. ‘நான்தான் எழுதினேன். என்னுடைய நாட்டுக்குச் செய்யும் சேவை’ என்று வேலப்பன் ஒப்புக்கொண்டார். அந்த இடத்திலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இப்படி, துரோகிகளும் மாவீரர்களும் உலவிய பூமியைப் படம்பிடிக்கிறது இந்தப் புத்தகம்! – புத்தகன் நன்றி: ஜூனியர் விகடன் 16-12-12