மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், விடியல் பதிப்பகம், கோயமுத்தூர், தொகுதி – 9, விலை 2000ரூ.
தத்துவார்த்த விசாரணைகளை வளர்தெடுத்தவை அமைப்புகளோ, கட்சிகளோ, பெரிய பல்கலைக்கழகங்களோ அல்ல. சில தனி மனிதர்களே அதைச் சாதித்தார்கள். அந்தவகையில் உலகின் திசையை மாற்றிய மாவோவின் படைப்புகளை முழுமையாகத் தமிழில் கொண்டுவந்த மகத்தான சாதனையை செய்துவிட்டு மண்ணில் புதைந்துவிட்டார் விடியல் சிவா. அவரது நினைவுகளைச் சுமந்து இந்த ஒன்பது தொகுதிகள் வெளிவந்து இருக்கின்றன. ஓர் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஒரு தேசத்துக்கு விடியலை விதைத்து கோடிக்கணக்கான மக்களுக்கு வசந்தத்தின் வாசலைத் திறந்து வைத்தவர் சீனத்தின் மாவோ, 6000 மைல் தூரத்தை மூன்று லட்சம் மக்களோடு நடக்கத் தொடங்கிய மாவோவின் நீண்ட பயணத்தில் இறுதியில் எஞ்சியவர்கள் 20 ஆயிரம் பேர்தான். ஆனால் ஒவ்வொருவரையும் 1000 பேருக்குச் சமமான நெஞ்சுறுதி கொண்டவர்களாகவும் அறிவுத்திறன் படைத்தவர்களாகவும் அவர் உருவாக்கினார். அதற்குப் பயன்பட்டது அவரது பேச்சும் எழுத்தும். அதுவே இப்போது தமிழில் மொத்தமாக வெளிவந்து இருக்கிறது. மாவோவை அனைவரும் ராணுவ வர்க்கத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டவராகச் சொல்வார்கள். ஆனால் ராணுவ வாதத்துக்கு இணையாக அரசியலும், பொருளாதாரமும் ஒரு கட்சியை, போராட்டத்தை, புரட்சியை வழிநடத்துவதில் எத்தகைய முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை தீர்க்கமாக வாதிடுகிறார். ராணுவ விவகாரங்களுக்கு அரசியலைவிட மேலான இடம் அளிப்பது குறித்த மாவோவின் விமர்சனங்களை இன்றைய மாவோயிஸ்ட்கள் வாசிக்க வேண்டும். கலந்துரையாடல்களில் இருந்து தவறும்போதுதான் ராணுவ வாதம் தலைதூக்குகிறது என்கிறார். சர்வதேச உதவி இல்லாமல் எந்த வெற்றியும் சாத்தியம் இல்லை. அப்படி வெற்றி கிடைத்தாலும் அதைத் தக்க வைக்க முடியாது என்று மாவோ சொல்லும் பாடத்தைத்தான் ஈழப் போராட்டம் நமக்குச் சுட்டிக்காட்டி இருக்கிறது. புறசக்திகளின் உதவி, சீனப் புரட்சிக்கு எப்படி உதவியது என்பதைப் பட்டியல் இடுகிறார். இன்றைக்குச் சில விஷயங்களை இனவாதம் என்று கம்யூனிஸ்ட்களே கொச்சைப்படுத்துகின்றனர். ஆனால் இனம் குறித்த கேள்வியானது, உள்ளடக்கத்தில் வர்க்கம் குறித்த கேள்வியே என்பது மாவோவின் கருத்து. கொரில்லா யுத்தத்துக்கு எப்படித் தயார் ஆவது என்பது முதல் ஒவ்வொருவரும் தனது உடலை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பது வரையிலான போரியல் பக்கங்கள் பிரமிப்பூட்டுகின்றன. ஒரு போருக்குத் தயார் ஆக எனக்கு மனரீதியாக 15 ஆண்டுகள் ஆனது என்கிறார் மாவோ. அதைவிட ஒவ்வொரு போராளியும் பொதுமக்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் முக்கியமானவை. இரவில் வாங்கிய பொருளைத் திருப்பித்தர வேண்டும் என்பது தொடங்கி பெண்கள் இருக்கும் இடங்களில் குளிக்கக்கூடாது என்பது போன்ற வரையறைகள் தனிமனித ஒழுக்கங்களாக இருக்கின்றன. போரியல், அரசியல், பொருளாதாரவியல் என எதை எழுதினாலும் அதற்குள் உளவியல் பார்வையுடன் பயணிக்கிறார். சீன இலக்கியங்கள் மீது அவருக்கு இருந்த ஆழமான படிப்பு காரணமாக அனைத்துக்கும் இலக்கிய மேற்கோள்களை விதைக்கிறார். அளவுக்கு அதிகமாக புத்தகங்களைப் படித்தால், உங்களது மூளை கல்லாக இறுகிவிடும் என்று சொல்லும் மாவோ, மேற்கோள் காட்டும் புத்தகங்களே பல்லாயிரம் தேறும். மாவோ அடிக்கடி சொல்லும் நூறு பூக்கள் மலர இந்த ஒன்பது தொகுதிகள் உதவும். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 7/11/2012.