மிளிர்கல்
மிளிர்கல், ஞாநி, பொன்னுலகம் பதிப்பகம்.
கார்ப்பரேட் நிறுவனத்தோடு காப்பியத்தின் பயணம் பொன்னுலகம் பதிப்பகம் வெளியிட்டுள்ள, இரா.முருகவேள் எழுத்திய, மிளிர்கல் என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். கண்ணகியை மையமாகக் கொண்ட கதை. கண்ணகி குறித்து, சோழ மண்டலம், பாண்டிய மண்டலம் என பகுதிக்கு ஏற்றவாறும், வணிகர்கள், மீனவர்கள் என, இனத்துக்குத் தக்கவாறும் கருத்துக்கள் நிலவுகின்றன.அந்த கருத்துக்களை எல்லாம் திரட்டி, ஒருமுகப்படுத்தும் புதிய முயற்சியில், பெண் ஆய்வாளர் ஒருவர் செல்கிறார். அவருடன் நவரத்தின கல் ஆய்வாளரும் செல்கிறார். இவர்கள் பற்றியதுதான் கதை. கண்ணகியைத் தேடி செல்லும் இவர்கள், கல் வியாபாரிகளிடம் சிக்கிக் கொள்கின்றனர். கண்ணகி உடைத்த சிலம்பிலிருந்து வெளிவந்த நவரத்தின கல்லில், மாணிக்கக் கல், கொங்கு மண்டலத்தில் கிடைக்கிறது என்ற தகவலை, நாவல் ஆசிரியர் பதிவு செய்கிறார். நவரத்தின கல் வியாபாரம் உள்ளூரில் நடக்கிறது. இந்த தொழிலில், சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களும் உள்ளன. இவர்களுக்கு இடையே நடக்கும் தொழில் போட்டிகள், அதர்ம தொழில் முறைகள் பற்றியும், நாவல் விவரிக்கிறது. சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியிலிருந்து விடுபட்டு, தொழிலில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளூர் வியாபாரிகளும் தங்கள் இஷ்டத்துக்கு தொழில் செய்கின்றனர். எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கின்றனர் என்பதையும் நாவல் சொல்கிறது. கண்ணகி என்ற பாத்திரம், தமிழ் காப்பியங்களில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. அதன் பிற கருத்துக்களைத் தேடி செல்லும்போது, நவரத்தின கல் வியாபாரத்தையும் இணைத்து சொல்லியிருப்பது. புதிய அணுகுமுறை. படிப்பதற்கு விறுவிறுப்பாக உள்ளது. எளிய மொழியை நாவல் ஆசிரியர் கையாண்டு இருப்பது வரவேற்கத் தக்கது. அதேநேரத்தில், ஒரு நாவலின் முடிவு நிறைவாக இருக்க வேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பு. இந்த நாவலின் முடிவில் பூர்த்தியாகவில்லை. -ஞாநி, எழுத்தாளர். நன்றி: தினமலர், 25/10/2015.