மிளிர்கல்
மிளிர்கல், பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர், விலை 200ரூ.
புகாரில் இருந்து கண்ணகி கோவலனுடன் கிளம்பிச் சென்று மதுரையை எரித்து பின்னர் தன்னந்தனியே காடேகி மலை உச்சிக்குச் சென்று பத்தினித் தெய்வமான கதை சிலப்பதிகாரம். கண்ணகி மண்மகள் பாராத தன் வண்ணச்சீரடிகளுடன் புகாரில் இருந்து நடந்து சென்ற வழியே பயணிக்கும் இந்நாவல் தன் பயணத்தின் வழியாக சிலப்பதிகாரம் தொடர்பான பல கேள்விகளுக்கு சமகாலப் பார்வைகள் வழியாக விடை காண முயல்கிறது. ஆனால் அத்துடன் நின்றுவிடாமல் காங்கேயம் பகுதியில் கிடைப்பதாகச் சொல்லப்படும் மாணிக்கம் போன்ற அபூர்வ கற்களைச் சுற்றி இயங்கும் மனிதர்கள் பற்றிய அபூர்வ உலகைத் திறந்துவிடுகிறது. அதற்குத் தேவையான இணைப்பாக கண்ணகியின் காற்சிலம்பில் இருந்த மாணிக்கக் கற்கள் காங்கேயத்தில் கண்டெடுக்கப் பட்டு பட்டை தீட்டப்பட்டவை என்ற கருத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது. வெறும் தமிழிலக்கியம் சார்ந்த நாவலாக மட்டுமின்றி சமகால பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், குறுங்குழுக்களாகச் செயல்படும் புரட்சி கர இயக்கங்களின் நடைமுறைகள், என்று பெரும் வலைப்பின்னலை நாவலாசிரியர் வழக்கறிஞர் இரா. முருகுவேள் மிக எளிமையாக அவிழ்க்க முயன்றிருக்கிறார். திராவிட இயக்கங்கள் சிலப்பதிகாரத்தை உயர்த்தி தமிழ் அடையாளமாகப் பிடித்து ஏன் என்ற கேள்விக்கும் மிளிர்கல் விடை தருகிறது. வணிக குலத்தில் புகாரில் பிறந்த கண்ணகியை சேரநாட்டைச் சேர்ந்த செங்குட்டுவன் கொண்டாடுவது ஏன்? கொங்கர்ச் செல்வி என்று அவளை சாலினி என்ற பெண் சாமியாடுகையில் கட்டுவது ஏன்? கோவலன் என்ற பெயரில் வழங்கப்படும் கொங்குநாட்டு பழங்குடிகளுக்கும் சிலம்புக்கும் என்ன தொடர்பு? என்று பலகேள்விகள். பூம்புகாரில் தொடங்கும் பயணத்தின் போது சமகாலத்தில் இருக்கும் கட்டடங்களுடன் சிலப்பதிகாரத்தில் வரும் இடங்களுடன் இணைத்துப்பார்த்து தேடிக்கொண்டே செல்கிறது முல்லை என்ற பெண்ணின் ஆவணப்படக்குழு. இந்த பயணம் கேரளத்தின் கொடுங்கலூரில் போய் முடிகிறது. ஆனால் முடிவல்ல. பெரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் சுரண்டலுக்கு எதிராக இந்தப் பயணத்தையும் ஆவணப்படத்தையும் பயன்படுத்த வேண்டிய புரிதலுடன் முல்லை தன் பயணத்தைத் தொடங்குகிறாள். பூம்புகாரில் அவள் சந்திக்கும் மீனவர்கள் கண்ணகி பாண்டியனின் மகள் என்கிறார்கள். மலைமீது முதுவர்கள் கண்ணகி மதுரை மீனாட்சி என்கிறார்கள். சேரநாடுதான் கண்ணகியைக் கொண்டாடுகிறது. இவற்றுக்கு இடையே கண்ணகி பற்றி தொன்மத்தில் உண்மை இருக்கக்கூடும். சிலப்பதிகார கால தமிழகம் தொடங்கி இன்றைய தமிழகம் வரையிலான காலப் பயணத்தை கொங்குநாட்டின் கண்கொண்டு நோக்கும் நூலாக இந்நாவல் அமைந்துவிட்டிருக்கிறது. நன்றி: அந்திமழை, 1/7/2014.