மு.வ. கட்டுரைத் களஞ்சியம் (இரண்டு தொகுதிகள்) ஆய்வும் பதிப்பும்
மு.வ. கட்டுரைத் களஞ்சியம் (இரண்டு தொகுதிகள்) ஆய்வும் பதிப்பும், முனைவர் ச.சு. இளங்கோ, பாரி நிலையம், சென்னை 108, பக்கங்கள் 1656, விலை 1000ரு
சங்கத்தமிழ் இலக்கியம், இலக்கணம், ஆய்வுக்கட்டுரை, கதை, கவிதை, கடிதங்கள், நாடகம், படைப்பிலக்கியம் என டாக்டர் மு. வரதராசனாரின் பங்களிப்பு அளப்பரியது. பல்வேறு பத்திரிக்கைகளுக்குப் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரால் எழுதப்பட்ட கட்டுரைகளில் தொகுக்கப்படாமலேயே இருந்த 242 கட்டுரைகளையும் முதன் முதலாக இரண்டு தொகுதிகளாகத் தொகுத்து பதிப்பித்துள்ளார் மு.வ.வின் கடைநிலை மாணவர் ச.க. இளங்கோ. மொழித்திறம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மொழியியல், திறனாய்வு, இலக்கணம், சான்றோர், சமயம், பொழிவு, கலை, இசை, நாடகம், கவிதை, சிறுகதை, வாழ்வியல், பொது, ஆங்கிலக்கட்டுரைகள் என்பதை முதன்மைத் தலைப்புகளாகக் கொண்டு கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. கட்டுரைகள் வெளிவந்த இதழ்கள் ஆண்டு பற்றிய குறிப்பு தந்திருப்பது நூலுக்குச் சிறப்பு சேர்க்கிறது. கட்டுரையைக்கூட கதையாக்கலாம் என்பதை இவரது ஒரு பகல் வாழ்க்கை என்ற கட்டுரை நிரூபித்துள்ளது. கல்வித் தத்துவங்கள், கல்வி முறை, நாணுகிறான் தமிழன் போன்ற கட்டுரைகள் இன்றைய பள்ளி கல்லூரி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டியவை. மு.வ.வின் எழுத்தை நேசிக்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய அரிய தொகுப்பு.
—-
இக்காலத் தமிழ் மரபு தற்காலத் தமிழின் இலக்கணம், கு.பரமசிவம், அடையாளம், புத்தாநத்தம், திருச்சி மாவட்டம்,பக்கங்கள் 296, விலை 180ரூ.
தமிழின் எழுத்து நடையும், பேச்சும் ஒவ்வொரு காலத்திலும் மாறி வந்திருக்கின்றன. இலக்கியத்துக்கே இலக்கணம் என்பதற்கேற்ப இவ்வாறு மாறி வந்திருக்கின்ற தமிழுக்கு இலக்கணம் கண்டிருக்கிறார் நூலாசிரியர். தமிழின் சொல்லமைப்பு எவ்வாறு மாறி வந்திருக்கிறது? எழுத்து வழக்குக்கும் பேச்சு வழக்குக்கும் இடையே உள்ள உறவு என்ன? வேற்றுமை இலக்கணத்தை இக்காலத் தமிழுக்கேற்ப எப்படிப் புரிந்து கொள்வது? என்பன போன்ற அரிய செய்திகளை நூல் விளக்குகிறது. நன்னூலில் உயர்திணையாகக் கூறப்பட்ட மக்களில் சிலரை நாம் எப்படி அஃறிணையாக மாற்றிவிட்டோம்? எடுத்துக்காட்டு அந்தப் பைத்தியம் அப்படிதான் உளறும். ஒரே சொல்லை சென்னையிலும், மதுரையிலும், நெல்லையிலும் எப்படி வேறுபடுத்தி உச்சரிக்கிறார்கள்? என்பன போன்ற சுவையான செய்திகளும் இடம் பெற்றுள்ளன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் தமிழை, இலக்கண அடிப்படையில் விளக்கும்போது பிரமிப்பும், ஆர்வமும் ஒரே நேரத்தில் ஏற்படுகின்றன. தமிழ் இலக்கணம் என்றாலே கசப்புணர்வுடன் முகம் சுளிப்பவர்களின் பார்வையை மாற்றிவிடக்கூடிய நூல். இன்றைய காலத்தின் தேவையை நிறைவு செய்திருக்கும் அரிய முயற்சி. நன்றி; தினமணி, 27 பிப்ரவரி 2012.