மேனேஜரியல் எபிலிட்டி ஆப் ஸ்ரீ ராமானுஜா இன்ரெட்ரோஸ்பெக்ஷன்

மேனேஜரியல் எபிலிட்டி ஆப் ஸ்ரீ ராமானுஜா இன்ரெட்ரோஸ்பெக்ஷன், ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரி, ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ வெளியிடு, திருச்சி, பக். 257, விலை 300ரூ.

காவிரி வெள்ளத்தை தடுக்க பொறியியலாளர்களை நியமித்த ராமானுஜர் கி.பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜர், வைணவ நெறியின் கலங்கரை விளக்காக திகழ்ந்தவர். சுவாமி விவேகானந்தர், ராமானுஜரை, சேவைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த மகான் என போற்றுகிறார். அரிய நெறிகளை பரப்ப, ராமானுஜர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். இஸ்லாமிய ஆட்சி, இந்தியாவில் வந்து காலூன்றிய காலகட்டத்தில் பாமர மக்கள் மதமாற்றத்தில் சிக்கி விடாமல் காத்தவர். அதற்காக அவர் பல்வேறு நெருக்கடிகளை தாங்கிகொண்டு, வாழும் இடங்களை மாற்றி வாழ்ந்தவர். அந்த இக்கடான நேரத்திலும், தன் முடிவுகளை அழுத்தமாக மக்கள் மனதில் ஊன்றியவர். கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை, அவரது பெருமையை பறைசாற்றும் புண்ணிய பூமி. இந்த நூலில், அவர் பின்பற்றிய பல்வேறு அணுகுமுறைகள் சுட்டிக்காட்டப்பட்டு, அவர் நிர்வாகத்தில் தலைசிறந்தவர் என்பது தெளிவாக்கப்படுகிறது. சோழர், பாண்டியர், கர்நாடகாவில் ஹொய்சாள மன்னர்கள் ஆட்சியில் வாழ்ந்த அவர், ஸ்ரீ ரங்கம் கோவிலில் கொண்டுவந்த நிர்வாக நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படுகின்றன. கோவில் ஒழுகு என்று கூறப்பட்ட அதைச் சம்பிரதாயமாக்கி, நிர்வாக ஓட்டைகள் அதில் நுழையாமல் காத்த பெருமையை, ஆசிரியர் பல்வேறு இடங்களில் ஆதாரத்துடன் முன்வைக்கிறார். கோவிலின் தினசரி நிர்வாகம், கட்டட பணிகள், பாதுகாப்பு, நிவேதன ஒழுங்கு என்று எல்லா விஷயங்களையும், ராமானுஜர் சீராக்கியது, அவரை சிறந்த நிர்வாகி என்று காட்டுகிறது. மன்னர் நியமிக்கும் ஸ்ரீ காரிய வாரியம் என்ற அமைப்பு செயல்பட்டபோதும், ஸ்ரீ வைஷ்ணவ வாரியத்தை அமைத்து நிர்வாகத்தை சிறக்க செய்தவர். அதற்காக நேரடியாக தினமும் தகவல் கேட்க நேரம் ஒதுக்கி செம்மைப்படுத்தியவர். காவிரியில் வெள்ளம் வந்து கரைப்பகுதிகளை அழிப்பதை காக்க, இருகரைப்பான் என்ற பதவியில், நிரந்தரமாக பொறியில் வல்லுனர்களை நியமித்ததையும் இந்த நூலில் காண முடிகிறது. தத்துவ அறிஞர், பாமர மக்களுக்கு எட்டெழுத்தை அறிவித்து விஷ்ணுவின் பெருமைகளை உணர்த்தியவர் என்ற கருத்தை உடைய பலரும் இந்தநூலைப் படித்தால், அவர் நிர்வாகத் திறமை கண்டு வியப்பர். நூலாசிரியர், சிறந்த வைணவப் பெருந்தகை என்பதால், வைணவ சம்பிரதாயத்திற்கே உரிய மணிப்பிரவாள நடையை இந்த ஆங்கில நூலில் காண முடிகிறது. -பாண்டியன். நன்றி: தினமலர், 28/12/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *