ரத்த ஞாயிறு

ரத்த ஞாயிறு, டாக்டர். கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், 127-63, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 108, விலை 260ரூ.

பாரத தேசத்தை எப்படிக் கட்டிக் காக்க வேண்டும் என்கிற அக்கறையுடன் போராடிய சரித்திர மகாபுருஷர்கள் ஏராளம். அவர்களுள் மக்களுக்காகவும், மதத்துக்காகவும், மொழிக்காகவும் போராடியவர்கள் சொற்பமானவர்கள். அவர்களுள் ஒருவர் சத்ரபதி சிவாஜி. இந்த மாவீரரை கதாநாயகனாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது இந்நூல். சிவாஜியின் காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் யாவும் விடுதலைப் போராட்டம் போன்றதே. பின்னாளில் ஆங்கிலேயனை விரட்டுவதற்காக எழுந்த போராட்டத்தின் தொடக்கத்தை சிவாஜிதான் அமைத்துக் கொடுத்தார் என்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது. அப்சல்கான் கொலை, ஷிஸ்டாகான் விரல் பறிகொடுத்த நிகழ்ச்சி, அவுரங்கசீப்பின் கோட்டைக்குள் புகுந்து சிவாஜி தப்பியது இம்மூன்றும் இந்த வரலாற்று நாவலில் முக்கியமான நிகழ்ச்சிகள். கதாநாயகி பூஜ்யா கற்பனை பாத்திரமாக வந்து கதைக்கு வலுவூட்டுகிறாள். சரித்திரப் புததினங்களைப் படைக்க விரும்புவோருக்கு வரலாற்று அறிவும், ஆராய்ச்சித் திறனும், இலக்கியப் புலமையும் இருந்திடல் வேண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில் எழுத்து நடையில் ஒரு கம்பீரமும், சுவையும், வேகமும் கொண்டு இந்நாவலை படைத்திருக்கிறார் இலக்கிய சாம்ராட் கோவி. மணிசேகரன். நன்றி: தினத்தந்தி  

—-

 

நுகர்வோரே நீதிபதி, நீதிபதி. ஏ. ரத்தினவேலு, சி. சீதாராமன் அண்டு கோ, சட்ட புத்தக வெளியீட்டாளர், 73/37, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 165ரூ.

நுகர்வோரின் உரிமையை பாதுகாக்கவும், அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்பபடுத்தும் பொருட்டும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986, நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 1987, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 1988, நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்கு முறைகள் 2005 போன்ற சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நுகர்வோரை பாதுகாக்க சட்டங்கள் பல இருந்தாலும் நுகர்வோர் நீதிமன்றத்தை எவ்வாறு அணுகுவது, நுகர்வோர் நீதிமன்றத்தில் எத்தனை பிரிவுகள் இருக்கின்றன. மேல்முறையீடு செய்ய என்ன செய்ய வேண்டும். எங்கே மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பவை பற்றியும், புகார்தாரர் என்பவர் யார்? புகார்தாரருக்கு எவ்வகையான புகார் கொடுக்க உரிமையுள்ளது, எவ்வாறு புகார் அளிக்க வேண்டும். நஷ்ட ஈடு தொகைக்கு ஏற்ப எந்த நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்பது பற்றியும் மேலும் பிற தகவல்களும் விரிவாகவும், விளக்கமாகவும், பாமரர்களுக்கும் விளங்கும் விதமாகவும் இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியே நூல் ஆசிரியராக இருப்பதால், அனைத்து தகவல்களையும், தெளிவுடனும், அவருக்கு இத்துறையில் உள்ள அனுபவத்துடனும் அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *