ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள்
ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள், ராகுல சாங்கிருத்யாயன், தமிழில் ர. சௌரிராஜன், அலைகள் வெளியீட்டகம், 25, தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 85ரூ.
ஒரு பெண்ணை நன்றாக வைத்துக்கொள்வது என்றால் நம் ஊரில் சொல்லக்கூடிய அதிகபட்ச வார்த்தை ராணி மாதிரி வச்சுக்கிறேன் என்பதுதான். ராணிகளை எப்படி வைத்திருந்தார்கள் என்று தெரிந்துகொண்டால் ஏன் அப்படி சொன்னார்கள் என்பது புரியும். புகழ்பெற்ற வரலாற்றுத் தத்துவ மேதையும் ஊர்சுற்றியுமான ராகுல சாங்கிருத்யாயன் எழுதிய இந்த நூல் ராஜஸ்தானத்து அந்தப்புரங்களில் வாழ்ந்த ராணிகளின் கதையைப் பேசுகிறது. அந்த நாட்டு சாதாரண குடிமகள்களுக்கு இருந்த சுதந்திரம்கூட இல்லாமல் அரசிகள் வாழ்ந்த அவலத்தைப் பேசுகிறது. ஆணாதிக்க வெறிகொண்ட அரசர்களால் அடிமைக் கொட்டில்களைப் போல உருவாக்கப்பட்ட அந்தப்புரங்களில், அரசிகள் பாலியல் அடிமைகளாக வாழ்ந்து மறைந்த கொடுமைகளை மனதை உருகச் செய்யும் வகையில் ராகுல்ஜி சித்தரிக்கிறார். சடங்குகளாலும் சம்பிரதாயங்களாலும் எண்ணற்ற சுமைகளின் அழுத்தத்தில் அவர்கள் எவ்வாறு உடலாலும் மனதாலும் சிதைக்கப்பட்டார்கள் என்பதைப் படிக்க படிக்க, நமது பெண்களின் துயரம் வர்க்க வேறுபாடுகள் கடந்தது என்பதை உணர முடிகிறது. அடிமைப் பெண்கள், அடிமை அரசிகள் என்ற இரண்டு பிரிவுகள்தான் இந்த நாட்டில் உண்டு என்பதற்கு ஒரு வரலாற்று ஆவணம் இந்த நூல். நன்றி: குங்குமம், 15/10/2012.
—-
ஈழத் தமிழர் வரலாறு, நியூ சென்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 55ரூ.
இலங்கை இப்போது சிங்களர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோதிலும், உண்மையில் அதன் பூர்வ குடிகள் தமிழர்களே. இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர்கள் பலர். ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் ஆட்சியின் கீழ்கூட இலங்கை இருந்திருக்கிறது. இதையெல்லாம் ஆ.கோ. ராமலிங்கம் அருமையாக எழுதியுள்ளார். பிரபாகரன் ஆயுதம் ஏந்தி தமிழ் ஈழ விடுதலைக்காகப் போராடுவது பற்றியும் விவரித்துள்ளார். புத்தகத்தை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் என்றாலும் 80 பக்கங்களில் இலங்கை வரலாற்றை சுருக்கமாகவும், விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளதை பாராட்டத்தான் வேண்டும். நன்றி: தினத்தந்தி, 10/10/2012.