லாக்கப்
லாக்கப், சந்திரகுமார் (ஆட்டோ சந்திரன்), டிஸ்கவரி புக் பேலஸ்.
அன்றாட பிரச்னைக்கு கிடைத்த வரவேற்பு! ஆட்டோ சந்திரன் என்ற சந்திரகுமார் எழுதிய லாக்கப் என்ற நாவலை படித்தேன். டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டு உள்ளது. கோவையை சேர்ந்த ஒரு இளைஞன் வேலைக்காக, பல்வேறு இடங்களுக்குச் செல்கிறார். 20வது வயதில், ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள, நெடுஞ்சாலை உணவகத்தில் வேலைக்கு சேர்கிறார். ஒரு நாள், அவர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்கின்றனர். கைதுக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. காவல் நிலையத்தில், திருட்டுக் குற்றம் ஒன்றை ஒப்புக்கொள்ள வழக்கமான போலீஸ் ‘கவனிப்பு’ நடக்கிறது. செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால் அடித்தே கொன்றுவிடுவர் என கூறுகின்றனர். சரி, நீதிபதியிடம் சொல்லாம் என, கோர்ட்டுக்கு செல்கிறான். ‘எனக்கும் இந்த குற்றத்துக்கும் தொடர்பில்லை. சந்தேகத்தின் பேரில் கைது செய்து, குற்றத்தை ஒப்புக்கொள்ள அடித்தனர்’ என, தனக்கு நேர்ந்ததை நீதிபதியிடம் கூறுகிறான். ‘எல்லா திருடர்களும் இப்படித்தான் சொல்வார்கள்’ என அவனை மூன்று மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார் நீதிபதி. தண்டனை முடிந்து வெளியே வருகிறான். இந்த உண்மை சம்பவம் தான் ‘லாக்கப்’. இதை அடிப்படையாகக் கொண்டு, ‘விசாரணை’ என்ற தமிழ்ப்படம் எடுத்தோம். திரைக்கதைக்காக சிலவற்றை சேர்த்தோம். வழக்கமான தமிழ் சினிமாபோல், காதல், ஆக்ஷன் இல்லாமல் படம் ஓடுமா என, பயந்துகொண்டே இருந்தோம். மக்களிடையே, ‘விசாரணை’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு எங்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மக்களின் அன்றாட பிரச்னைகளுக்கு எப்போதும், வரவேற்பு உண்டு. அதை யாரும் புறந்தள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை, ‘விசாரணை’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு உறுதி செய்தது. ‘லாக்கப்’ நாவல் சாதாரண ஒருவனின் சமூக வாழ்க்கை நிலையையும், அவனை விதத்தையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது. சமூகம் நாகரிகத்தை நோக்கி செல்கிறது. பல தளங்களில் முழுமையான நாகரிகம் பெற்ற சமூகமாக உள்ளது என, கூறினாலும், ‘லாக்கப்’ சம்பவங்கள், தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. -மணிமாறன். (திரைப்பட இயக்குனர்). நன்றி: தினமலர், 14/2/2016.