லீகல் பிராட்டர்னிட்டி எம்ப்ரேஸ்டு மீடு
லீகல் பிராட்டர்னிட்டி எம்ப்ரேஸ்டு மீடு (ஆங்கிலம்), நீதியரசர் டி.எஸ். அருணாச்சலம், சட்ட உதவி ஆணையத்திற்கு நன்கொடையாக வெளியீடு, பக். 232.
கீழமை நீதிமன்றம் தான் வழக்கறிஞர் தொழிலுக்கு அஸ்திவாரம் நீதியரசர் டி.எஸ். அருணாச்சலத்தால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூல், விற்பனைக்கல்ல; எனினும் அச்சுக் கூலியாக 100ரூபாயை சட்ட உதவி ஆணையத்திற்கு நன்கொடையாக அளித்து பெற்றுக் கொள்ளலாம் என்ற குறிப்போடு இந்நூலை வழக்கறிஞர் சமூகத்திற்கும், நீதிமன்றத்திற்கும் அர்ப்பணித்துள்ளார். கடந்த 1948 முதல் 17/12/1998ல் திருவண்ணாமலையில் மகான் யோகிராம் சரத்குமார், தம்மை அடியவராக ஆட்கொண்டவது வரை, 50 ஆண்டுக்கால வாழ்க்கை அனுபவங்களை, குறிப்பாக நீதித்துறை பற்றிய அனுபவங்களை எளிமையாக சுவாரசியமான முறையில் என்னை தழுவிய சட்ட சகோதரத்தன்மை எனும் தலைப்பில் எழுதியுள்ளார். வழக்கைப் படிப்பதற்கு முன், வழக்கு நடைபெற இருக்கும் நீதிபதியைப் பற்றி அறிந்துகொள்.நீதிபதி தவிர்க்க முற்படும் கருத்து பற்றி விவாதத்தில் திணிக்காதே. மூல ஆவணங்களை ஆராயாமல் வாதிடாதே எனும் மூத்த வழக்கறிஞரின் ஆலோசனைகளை (பக். 9) அடியொற்றி நடந்தவர். குற்றவியல் அல்லது உரிமையியல் என, எந்த வழக்காயினும் வழக்கறிஞர் தொழிலுக்கு அஸ்திவாரமாக அமைவது, கீழமை நீதிமன்றத்திலிருந்து பெறும் பயிற்சி தான் (பக். 12) என அறிவுறுத்துகிறார். மூத்த குற்றவியல் வழக்குகளில் தேர்ச்சி பெற்றோரிடம், தனக்குள்ள தோழமை பற்றியும், அவர்களிடம் கற்றுக் கொண்ட தொழில நுணுக்கங்கள் பற்றியும் விரிவாக விவரித்துள்ளார். நீதிபதி பதவியை வேண்டாம் என்று, மூன்று முறை உதறியவர், பின் பலரது வற்புறுத்தலுக்கு இணங்கி ஏற்றுக்கொண்டார். நீதிபதி சீனிவாசன் அவர்கள் விடுப்பில் சென்று, தனக்கு தற்காலிக தலைமை நீதிபதி பதவி உயர்வு பெற்று, பின் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்துள்ளார். ஓய்விற்குப் பின்னும் உச்ச நீதிமன்றம் சென்று இரண்டு ஆண்டுகள் குற்றவியல் வழக்குகளை நடத்திய தம்மை, குருநாதர் யோகிராம் சுரத்குமார் அழைத்ததன் பேரில், திருவண்ணாமலை வந்து அங்கு ஆசிரமத்திலேயே தங்கி ஆன்மிகப் பணியாற்றி வருவதையும் நீதியரசர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய வழக்கறிஞர்களின் போக்கும், நீதிபதிகளின் நியமன முறைகள் பற்றியும் வதேனை தெரிவிக்கும் நூலாசிரியர், நீதிபதிகள் காலத்தில் அருமை உணர்ந்து, நீதிமன்றத்தில் எடுக்கும் குறிப்புகளை மறந்துவிடாமல் உடனுக்குடன் தட்டச்சு பெறச் செய்து, அதிகபட்சம் மூன்று மாதத்திற்குள் தீர்ப்புகளை வழங்குவதுதான் ஆரோக்கியமான நீதி பரிபாலனமாக இருக்கும். பொது மக்களும் வரவேற்பர் என்று கருத்து தெரிவித்துள்ளார். நீதியரசரின் இந்நூல், இன்றைய வழக்கறிஞர்களுக்கும், நீதித்துறைக்கும் பலவிதத்திலும் பயன்படக்கூடிய வாழ்வியல் வழிகாட்டி நூல். -பின்னலூரான். நன்றி: தினமலர், 2/11/2014.