வஞ்சி

வஞ்சி, பரிசில் புத்தக நிலையம், 96, ஜெ பிளாக், நல்வரவு தெரு, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், சென்னை 106, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-507-3.html

இதழ்த் தொகுப்புகள், ஆய்வு – ஆவணம். காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான் என்று பத்திரிகைகளைப் பார்த்துப் பாடினார் பாரதிதாசன். இப்படி பட்டொளி வீசிய பல பத்திரிகைகள் கால வெள்ளத்தில் காணாமல்போன கவலையை அதிகப்படுத்துகிறது இந்தப் புத்தகம். இலக்கிய வட்டம், கசடதபற, கொல்லிப்பாவை போன்ற இலக்கிய இதழ்களும், அறிவு, மனிதன், மனஓசை உள்ளிட்ட இடதுசாரி இதழ்களும், ஆதிதிராவிடன், சுதேசமித்திரன், சரஸ்வதி, சுபமங்களா போன்ற வெகுஜன இடைநிலை இதழ்களும்தான் தமிழ்நாட்டின் அறிவுச் சூழலை ஆரோக்கியமாக்க உழைத்த உன்னதமான இதழ்கள். தமிழ் இதழியல் வரலாறுக்கு அடித்தளம் அமைத்த இதழ்களின் சுருக்கமான வரலாறு இது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை மாணவர்களே இந்தக் கட்டுரைகளைத் தயாரித்திருப்பது. நம்பிக்கை தரும் முயற்சி. இதை வழிநடத்திய பேராசிரியர் வீ. அரசு பாராட்டுக்கு உரியவர். நவீன தமிழ் இலக்கிய கர்த்தாவான க.நா. சுப்பிரமணியம் முன்றில் இதழில் எழுதிய தலையங்க வரையறை இலக்கியப் பத்திரிகைகளின் நெறிமுறையாக மாறுமானால், ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகும். இலக்கியத்துக்காகப் பாடுபட நினைக்கும் ஒரு சிறு பத்திரிகை, கூடியவரை கோஷ்டி மனப்பான்மைக்கும், தனிமனிதத் துதிபாடலுக்கும், போலி அறிவுஜீவனத்தனத்துக்கும் இடம் தரக்கூடாது. தவறான அர்த்தத்தில் ஹிருதயர்களைத் தேடிப் போகக்கூடாது. ஆசிரியருக்கு ஒவ்வாத உடன்பாடில்லாத கருத்துகளும் ஒரு பத்திரிகையில் இடம்பெற வேண்டும். அதுதான் இலக்கியச் சேவை. மற்றதெல்லாம் சுயலாபம் பெறும் முயற்சிகள்தான் என்கிறார். இந்த வரையறைக்கு உட்பட்ட இதழ்கள்தான் இந்த தொகுப்பில் இடம் பெற்றள்ளன. அடிமைப்பட்ட காலம் அதிகம் என்பதால், இந்தியாவின் பத்திரிகை வரலாறு என்பதும் சுதந்திரப் போராட்டத்தின் வரலாறுதான் என்பார்கள். சுதேசமித்திரன் இதழ் எதிர்கொண்ட அடக்குமுறைகள் அளவில்லாதது. இதழியலாளருக்கு இரண்டு தடைகள் ஏற்படுகின்றன. அகத் தடைகள், புறத்தடைகள் என்பன அவை. முதலாவது தடை என்பது ஆசிரியருக்கு சுதந்திரமின்மை, பொருளாதாரத் தடை, கொள்கையின்மை. இரண்டாவது தடை என்பது, பாதுகாப்பு இன்மை, உயர் மட்டங்களில் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் என்கிறார் கட்டுரையாளர். இத்தகைய அடக்கு முறைகளை எதிர்கொண்டு கம்பீரமாக நின்றதால்தான், அந்த இதழ்கள் இன்றும் நினைவு கூரத்தக்கதாக உள்ளன. இலக்கியைத்தை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களைப் பற்றிக் கவலை இல்லை.  இலக்கிய ரொட்டியின் எந்தப் பகுதியில் வெண்ணெய் தடவப்பட்டு இருக்கிறது என்று ஆராய்பவர்களைப் பற்றிக் கவலை இல்லை. இலக்கியத்தை வாழ்க்கையின் அனுபவப் பகிர்தலாக முன்னோட்டமாகக் கருதுபவர்கள் எல்லோரையும் கசடதபற அழைக்கிறது என்று எழுதுகிறார் சா. கந்தசாமி. அத்தகைய மனிதர்களை உருவாக்க இந்தப் புத்தகம் தூண்டுதலாக அமைகிறது. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 5/12/12

Leave a Reply

Your email address will not be published.