வலது காலை எடுத்துவைத்து வா…
வலது காலை எடுத்துவைத்து வா… ‘பொம்மை’ சாரதி, அஸ்வினி புக் கம்பெனி, விலை ரூ. 65
பல பேர் நல்ல கதைகளை எழுதியிருந்தால் உரிய வெளிச்சம் கிடைக்காமலேயே போய்விடுகிறது. ‘மங்கை’, ‘சுமங்கலி’ இதழ்களில் ஆசிரியராக இருந்த ‘பொம்மை’ சாரதியின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது. முக்கியமாக 1951-ஆம் ஆண்டில் அப்போது பிரபலமாக இருந்த ‘காவேரி’ மாத இதழில் வெளியான ‘முதல் பிச்சை’ என்னும் தலைப்பிலான சிறுகதையைச் சொல்லவேண்டும். அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் சிரஞ்சீவியாகத் தோற்றமளிக்கிறது. ‘தமிழின் முதல்தரமான சிறுகதைகளுள் இது ஒன்று’ என்று திருப்பூர் கிருஷ்ணன் மதிப்பிடுவதை அப்படியே வழிமொழியலாம். ஒவ்வொரு சிறுகதைக்கும் ஒரு பிரபல எழுத்தாளரிடம் மதிப்பீடு பெற்று வெளியிடுவது என்பது ஓர் அசாதாரணமான முயற்சி! இதில் சாரதி வெற்றி பெற்றிருக்கிறார். தேவிபாலா, கீழாம்பூர், விமலாராணி, பாக்கியம் ராமசாமி, அனுராதா ரமணன், கௌதம நீலாம்பரன், புஷ்பா தங்கதுரை… இவர்களின் மதிப்பீடுகளும் விஷய கனமுள்ளவை. பதினைந்து கதைகள். படித்து மகிழ நல்ல தொகுப்பு. நன்றி: கல்கி 23-12-12