வள்ளுவர் முப்பால் அறத்துப்பால்

வள்ளுவர் முப்பால் அறத்துப்பால், உரையும் உரைவும், உரையாசிரியர் தி.முருகரத்தனம், தமிழ்ச்சோலை வெளியீடு, பக். 145, விலை 100ரூ.

உலகம் போற்றும் அறநூலாம் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். நாட்டின் தேசிய நூலாக அறிவிப்பதற்குத்தகுதியுடைய திருக்குறளை, பலரும் தத்தம் போக்கில் வெளியிடுகின்றனர். இந்நூலை வெளியிட்டுள்ள இந்த உரையாசிரியர், முதல் நாற்பது குறட்பாக்களை (பாயிரம்) வள்ளுவர் இயற்றவில்லை என கருதுகிறார். திருக்குறளை முப்பால் என்றுதான் கூற வேண்டும் என்றெண்ணும் ஆசிரியர், காரணம் கூறாமல் தம் விருப்பப்படி குறட்பாக்களை புதிய முறையில் வரிசைப்படுத்தி எண்கள் கொடுத்துள்ளார். இந்நூலின் ஆசிரியர் ஒவ்வொரு குறட்பாவையும் அச்சிட்டபின், படிப்போர்க்குத் தெளிவு ஏற்படுவதற்கேற்ப பிரித்தும் எழுதுகிறார். ஆனால் குற்றியலுகரங்களை விலக்கி எழுதுகிறார். அதாவது சொல்லின் இறுதியில் வரும், உ என்ற எழுத்தை ஒதுக்குகிறார். அதனால் படிப்போருக்கு குழப்பமே ஏற்படும். ஆய்வறிஞர்களுக்கு மட்டுமே இப்பதிப்பு எனில், பிறர் இந்த நூலை வாங்கிக் குழம்ப மாட்டார்கள். அன்பிலார் என்பதை, அன்பு இலார் என்றெழுதாமல், அன்ப் இலார், என்றும், தமக்குரியர் என்பதை, தமக்கு உரியர் என்றெழுதாமல் தமக்க்உரியர் என்றும், அன்பீனும் (அன்புஈனும்) என்பதை அன்ப்ஈனும் என்றும் இவ்வாறே தொடந்துள்ள முறை புலமை பெற்றோர்க்கே புரியாத புதிராக உள்ளது. திருக்குறளும் அதன் கருத்துக்களும் பாமரரையும் சென்று சேர வேண்டும் என்றெண்ணும் நிலையில், இம்முறை தேவையா என்றெண்ண வைக்கிறது. ஆசிரியர் உரசி உரசி உரைத்துப் பார்த்துள்ள முறை புதுமையானது. அடக்கம் உடைமை, மனம், மொழி, மெய் (மனம், வாக்கு, காயம்) அடக்குதல் எனவும், ஐம்புலன்கள், மெய், வாய், கண், மூக்கு, செவி அடக்குதல் எனவும், முன்னை உரையாளர்கள் ஆங்காங்கே வரைந்து செல்கின்றனர். இரண்டும் இருவேறு கருத்தியல்கள், கொள்கைகள். இரண்டும் அடக்கம் உடைமை எனல், குழப்பல். இரண்டுள்ளும் வருவன வாய், மெய், கூறியது கூறல் (பரிது, திரிவிதகரணம் மட்டும் கூறுவர்). புண்ணிய பாவ கருத்துக்களை, முப்பாலில் வீணே தேடி அலைதல் வேண்டியுள்ளது. -(பக். 42). வள்ளுவர் முப்பால் அறத்துப்பால். -பேரா. ம.நா. சந்தானகிருஷ்ணன். நன்றி: தினமலர், 28/9/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *