வாக்ரிகளின் வாழ்வியல்
வாக்ரிகளின் வாழ்வியல், ஆ.குழந்தை, பயணி பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 248, விலை 150ரூ.
தமிழகத்திலுள்ள வாக்ரி சமுதாயத்தினருடன் குறிப்பாக, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வாழும் வாக்ரி சமுதாயத்தினருடன் பல ஆண்டுகள் உடனிருந்து பெற்ற அனுபவத்தின் அடிப்படையிலான தேடலை எழுத்து வடிவமாக்கியுள்ளார் நூலாசிரியர். வாக்ரிகளின் வாழ்வியலை பண்பாட்டு வாழ்வியல், அரசியல் வாழ்வியல், பொருளாதார வாழ்வியல், வாய்மொழி வழக்கான வாழ்வியல், சமூக, சமய வாழ்வியல் எனப் பல கூறுகளாக பகுத்து ஆராய்ந்துள்ளார். மேலும் கூடி வாழ்வதிலும், உறவு ஏற்படுத்துவதிலும், அன்பு செலுத்துவதிலும், பற்றுறுதி கொள்வதிலும், நோக்கத்துக்காக வாழ்வதிலும், ஆற்றலாகக் கருதுவதிலும், தொடர்புத் தன்மையுடன், தொடர்பில்லாத தன்மையுடனும் வாழ்வதிலும் வாக்ரிகளின் வாழ்வு அடங்கியுள்ளது என்பதை அழகியல் நிறைந்த ஆவணமாகப் பதிவாகியுள்ளது. தொன்ம வழியாக காலம், இடம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றுக்கு உள்பட்டு அடையாளங்கள் உருவாக்கப்படுகின்றன. கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு நிகழ்காலத்தில் அடையாளம் கட்டமைக்கப்படுகின்றன. அடையாளத்துக்கு முக்காலத் தன்மை உண்டு என்ற வரிகள் நூலுக்கு ஆணிவேராகத் திகழ்கின்றன. மொத்தத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவும் அரிய படைப்பு.
—-
கேளுங்கள் நான் யார்? சொல்லுங்கள் நான் ஆத்மா, இலஞ்சி. இல. சேதுராமலிங்க பாண்டியன், காரைக்கால் 2, பக். 192, விலை 75ரூ
ஓய்வு பெற்ற அரசு ஊழியரான நுலாசிரியர், பிரம்மகுமாரிகள் சங்கத்தில் ஞானக் கல்வி பயின்றவர் என்பதை இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும், படிப்போர் மனதை இதமாக வருடிச் செல்லும் பாங்கிலிருந்தே அறிந்துகொள்ளலாம். முருகனுக்குப் பிடித்தது உகந்தது பஞ்சாமிர்தம் என்கிறோம். பஞ்சாமிர்தம் ஒரு எதிர்மறைச் சொல்லாம். ஐந்து பழங்களின் சேர்க்கைதான் பஞ்சாமிர்தம் என்றால், அவற்றுக்கு எதிர்மறையாகக் கருதி விளக்க வேண்டியவை என்னென்ன என்பதை, கோபம், காமம், பேராசை, பற்று, அகங்காரம் எனப் பகுத்து பஞ்சாமிர்தத்துக்கு எதிர்மறையான இவ்வைந்து குணங்களுக்குப் புதிய விளக்கம் தந்திருக்கிறார். இவை ஐந்தும் ஒரு மனிதனை என்னென்ன செய்யும் என்பதையும், அருளாளர்கள் வாழ்வீலிருந்து குட்டிக் குட்டிக் கதையாக எடுத்துக் கூறி விளக்கியிருப்பது நம் அறியாமை இருளை அகற்ற உதவுகிறது. காரைக்கால் வானொலியில் ஞானச்சுடர் என்ற பெயரில் காற்றில் மிதந்து வந்து நேயர்களைக் குளிர வைத்த வானொலி உரை நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் சுழி, கர்மங்களின் நிலைப்பாடு, திடசங்கல்பம், மன் இத மலர், செவ்வாடை சிந்தனை, ஆன்மீகராகம், விதி, இசை ஞானத் தமிழ் என 37 தலைப்புகளிலான கட்டுரைகள் ஆன்ம ஞானத்துக்கு வழி வகுக்கின்றன. நன்றி; தினமணி, 24/10/11.